உணவகத்தில் ஏற்பட்ட தகராறில் உரிமையாளர் உட்பட, இருவரை தாக்கியதாக 5 பேரை சேலையூர் போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம் அடுத்த கிழக்கு தாம்பரம், சேலையூர், பாரத் நகரைச் சேர்ந்தவர் ராஜா (40), இவர், சேலையூர் - அகரம் தென் சாலையில், 'கிங்' என்ற பெயரில் உணவகம் நடத்தி வருகிறார். இந்நிலையில், இவரது, ஒட்டலுக்கு நேற்று மதியம், 'ஸ்கார்பியோ' காரில் வந்த, ஐந்து பேர் சில்லி சிக்கன் மற்றும் பிரைடு ரைஸ் ஆகியவற்றை கேட்டுள்ளனர்.
இதையடுத்து, சில்லி சிக்கனை ஓட்டல் உரிமையாளர் ராஜா, தயார் செய்து கொண்டிருந்தார். அப்போது, சிக்கனில் மசாலா குறைவாக இருப்பதாகக் கூறி, அந்த ஐந்து பேரும் ராஜாவுடன் தகராறு செய்து தாக்கியுள்ளனர்.
அதை தடுக்க வந்த சேலையூர், ரங்கநாதன் நகரைச் சேர்ந்த, பார்த்திபன் (49) என்பவரையும், அந்த மர்ம நபர்கள் தாக்கியதில் பார்த்திபன் அணிந்திருந்த மூன்று சவரன் செயின் பாதி அறுந்து காணாமல் போனது.
இதுகுறித்து, ராஜா மற்றும் பார்த்திபன் இருவரும், சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து இருவரையும் தாக்கிவிட்டு தப்பியோடிய, அந்த ஐந்து பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் அவர்கள், சேலையூர் பாரத் நகரைச் சேர்ந்த சதீஷ்குமார் (20), மதுராந்தகம் சாத்தனூரைச் சேர்ந்த ரோகித் விக்கி (27), அருங்குணம் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்தன் (32), மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.