அரியலூர் அருகே குடும்ப சண்டையில் 5 மாத கர்ப்பிணி தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றியுள்ளனர் போலீசார். இறந்த பெண்ணின் தாய் பார்வதி கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில் போலீசார் கொலை வழக்காக மாற்றினர். இது தொடர்பாக ஏற்கனவே மாமனார் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து கணவனும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே வெத்தியார் வெட்டு கிராமத்தை சேர்ந்த விஜய் பிரகாஷ் , இவரது மனைவி அபிராமி. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு மகன் உள்ளார். 5 மாத கர்ப்பமான நிலையில் இருந்தார். இந்நிலையில் கடந்த 3ஆம் தேதி அபிராமி வீட்டில் சமைக்க மீன் கழுவியதாவும், அப்போது தண்ணீரில் விளையாடிய மகனை அடித்தாகவும் கூறப்படுகிறது.
இதனால் மாமனார் கலிய மூர்த்தி, மாமியார் வசந்தா திட்டியுள்ளனர். அதை கணவனிடம் அபிராமி கூறிய நிலையில், கணவனும் அபிராமியை அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அபிராமி மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. 95 சதவீதம் தீக்காயங்களுடன் அபிராமி உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அபிராமி அவரது அம்மாவிடம் நடந்ததை கூறியுள்ளார். அதன்பேரில் அபிராமியின் அம்மா பார்வதி போலீசாரிடம் அபிராமியின் வாக்கு மூலத்தை கூறினார்.
அபிராமி கூறியதில், மாமனார் கலிய மூர்த்தியே மண்ணெண்ணையை அபிராமி மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இதனால் அபிராமியின் உடல் எரிந்துள்ளது. இதனை பார்த்த அவரது கணவன் விஜய் பிரகாஷ் சாக்கை எடுத்து அபிராமி மீது போட்டு தீயை அணைத்துள்ளார் என வாக்கு மூலம் கொடுத்தார். இதனையடுத்து வழக்கை கொலை வழக்காக மாற்றி மாமனார் கலிய மூர்த்தியை மீன் சுருட்டி போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமணையில் சிகிச்சை பெற்றுவந்த அபிராமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தொடர்ந்து போலீசார் அபிராமியின் கணவர் விஜய் பிரகாஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது காவல் நிலையத்தில் உள்ள பாத்ரூமில் இருந்த லைஷாலை எடுத்து குடித்துள்ளார். இதனால் போலீசார் பிரகாஷை ஜெயங்கொண்டம் மருத்துவமணையில் சிகிச்சைக்கு சேர்த்து பின்னர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.