சென்னை காவல் ஆணையரை சந்தித்த குடிபெயர்வோர் பாதுகாப்பு அலுவலர், வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றும் அரசு அனுமதி பெறாத போலி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்தார். இதன் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு மற்றும் வேலைவாய்ப்பு மோசடி தடுப்புப் பிரிவு காவல் துறையினர், சென்னையில் அனுமதியின்றி பல்வேறு நாடுகளுக்கு ஆட்களை அனுப்பிய 9 நிறுவனங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
சென்னை ஆயிரம் விளக்கு, அண்ணா சாலை, கொளத்தூர், எழும்பூர் ஆகிய இடங்களில் செயல்படும் நிறுவனங்களைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 146 பாஸ்போர்ட்டுகள், 15 விசா ஆவணங்கள், 7 கம்ப்யூட்டர், 24 லேப்டாப், 15 மொபைல், 2 ஹார்ட் டிஸ்க்குகள், இரண்டு பிரிண்டர்கள், 3 ஸ்வைப்பிங் மெஷின்கள், 1 ஐபேடு, 3 சிபியு-க்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிறுவனங்களால், ஏமாற்றப்பட்டவர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக கூறும் போலி முகவர்களை நம்பி பணம் செலுத்த வேண்டாம் என்றும் அதிகாரிகள் கோரியுள்ளனர்.