செய்தியாளர்: K.கருப்பஞானியார்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அழகாபுரி பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி விசாரணை செய்துள்ளனர். அப்போது அந்த காரில் ஓசூரைச் சேர்ந்த ராணி, கோவிந்தநல்லூரைச் சேர்ந்த சக்திமோகன், பாலக்கோட்டையைச் சேர்ந்த ஜெமில் ஆகிய மூவர் வந்துள்ளனர்.
இதையடுத்து அவர்களிடம் விசாரணை செய்த போது, முன்னுக்குப் பின் முரணாகவும் ராணிக்கு காலில் அடிபட்டுள்ளதால் வைத்தியம் பார்ப்பதற்கு வந்ததாகவும் கூறியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர் நடத்திய சோதனையில், காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 கிலோ குட்கா, புகையிலை பொருட்களை கைப்பற்றினர்.
இதைத் தொடர்ந்து மூவரையும் கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும், குட்கா பொருட்களையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சுரக்காய்பட்டியைச் சேர்ந்த ஜெகநாதன், வடக்கு குப்புனாபுரத்தைச் சேர்ந்த திருப்பதி ஆகியோரிடம் குட்கா பொருட்களை விற்பனை செய்ய வந்ததாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், திருப்பதி மற்றும் ஜெகநாதன் வீட்டில் சோதனை செய்ததில் 60 கிலோ குட்கா பொருட்கள், இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் 90 கிலோ குட்கா பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்ய முயன்ற 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.