கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களிடம் நகை திருட்டில் ஈடுபட்ட 4 பெண்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 37 லட்சம் ரூபாய் மதிப்பிலான 144 சவரன் நகை மீட்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில், தக்கலை, திங்கள்நகர், களியக்காவிளை பகுதிகளில் பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களிடம் நகை திருடப்படும் சம்பவம் அதிகமாக நடந்து வந்தது. இது குறித்து குமரி மாவட்டத்தில் இரணியல், தக்கலை, களியக்காவிளை ஆகிய காவல்நிலையங்களில் 24 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் குறித்து குமரி மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் துரை அறிவுரையின் பேரில் உதவி ஆய்வாளர் விஜயன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இரணியல் அருகே சந்தேகத்திற்கிடமாக இரண்டு பெண்கள் போலீசாரிடம் சிக்கியுள்ளனர். அவர்களை விசாரித்ததில் குமரி மாவட்டத்தில் பேருந்துகளில் பல்வேறு பகுதிகளில் தாலிச்செயின், கைக்காப்பு, கைச்செயின் போன்ற பல்வேறு நகைகளை கொள்ளையடித்தது தெரிய வந்தது. மேலும் விசாரணையில் இவர்களுடன் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் மேலும் இரண்டு பெண்கள் அடையாளம் காட்டப்பட்டு, அவர்களையும் போலீசார் கைது செய்தனர். இதில் கைது செய்யப்பட்ட பெண்கள் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் திருடிய 37 லட்சம் ரூபாய் மதிப்பிலான 144 சவரன் நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.