சென்னையில் ஆள்மாறாட்டம் மூலம் போலியான ஆவணங்கள் தயார் செய்து நில அபகரிப்பு செய்த நான்கு பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரை சேர்ந்த அனிதா இன்குர்த்தி கடந்த 2004 ஆம் ஆண்டு குன்றத்தூரில் தியாகராஜன் என்பவரிடம் இருந்து 2 வீட்டு மனைகளை வாங்கியுள்ளார். இந்நிலையில், மேற்கண்ட இடத்தை கடந்த ஆண்டு மே மாதம், ஆள்மாறாட்டம் செய்தும் போலியான ஆவணங்கள் தயார் செய்தும் குன்றத்துார் சார்பதிவாளர் அலுவலகத்தில் செந்நீர்குப்பத்தை சேர்ந்த மணிவண்ணன் மற்றும் கொளத்தூரை சேர்ந்த ராஜேந்திரகுமார் ஆகியோருக்கு விற்பனை செய்து கொடுத்தது போல ஆவணம் செய்தது தெரிய வந்தது.
இது சம்பந்தமாக புகார்தாரர் அனிதா இன்குர்த்தி காவல் ஆணையாளரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு நிலமோசடி தடுப்பு சிறப்பு பிரிவு வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தினர்.
விசாரணையில், “அனிதா பணி நிமித்தம் காரணமாக கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்தபோது, கண்ணன் என்பவர் அந்த இடத்தை அடையாளம் காட்டி போலி ஆவணம் மற்றும் போலியாக நபர்களை தயார் செய்து, ராஜேந்திரகுமார் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் பெயரில் போலி ஆவணங்களை உருவாக்கியது தெரியவந்தது.
மேலும், அதனை கொளத்தூரைச் சேர்ந்த முகமது அசிமுதின் மூலம் உருவாக்கி விற்பனை செய்ததும் தெரியவந்தது. அத்தோடு பேங்க் ஆப் பரோடா வங்கியின் மூலம் தலா 35 லட்சத்திற்கு என மொத்தம் 70 லட்சத்திற்கு இரண்டு இடத்தை அடமானம் வைத்து பணத்தையும் மோசடி செய்துள்ளதை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து மோசடியில் ஈடுபட்ட ராஜேந்திரகுமார், மணிவண்ணன், முகமது அசிமுதின், கண்ணன் ஆகிய 4 பேரை கைது செய்த காஞ்சிபுரம் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் கைதானவர்களை காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர். இந்த நில அபகரிப்பு விவகாரத்தில் தொடர்புடைய அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் யார் என்பது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.