செய்தியாளர்: நவீன் குமார்
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நொளம்பூர் சாலையில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் மேலாளராக பணிபுரிந்து வருபவர் அசோக் குமார். இவர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார்.
அதில், “ஆகஸ்ட் 26 ஆம் தேதி நான் சூப்பர் மார்க்கெட்டில் பணியில் இருந்தபோது அங்கு வந்த 3 பெண்கள் 1 ஆண் என மொத்தம் 4 பேர், சூப்பர் மார்க்கெட்டில் அங்கும் இங்கும் திரிந்துக் கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்களை தீவிரமாக கண்காணித்தபோது, அவர்கள் கடையில் இருந்த பொருட்களை திருடி உள்ளாடைக்குள் மறைத்து வைத்தது தெரிய வந்தது.
இவை அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் உறுதியானது. இதையடுத்து கடையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் உதவியுடன் அவர்களை பிடித்து சோதனை செய்தபோது, கடையை விட்டு வேகமாக வெறியேறிய பெண் ஒருவர் ஓட முயற்சி செய்ததார். அவரை விரட்டிப் பிடித்த கடை ஊழியர்கள் அந்தப் பெண் மறைத்து வைத்திருந்த பொருட்களை வெளியே எடுத்துனர். அதில், அந்த கடையில் பணியாற்றும் ஊழியர்களின் 2 செல்போன்களையும் அவர் திருடியது தெரியவந்தது. சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்யவேண்டும்” எனக்கூறி, தாங்கள் பிடித்த பெண்ணை காவல் நிலையத்தில் ஒப்படைத்ததாக தெரிகிறது.
இதையடுத்து விசாரணையின்பேரில் நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் அக்கடையில் இருந்த முந்திரி, திராட்சை உள்ளிட்ட உலர் பருப்பு மற்றும் பழ வகைகள் மட்டுமின்றி ஹார்லிக்ஸ், பூஸ்ட் போன்ற பொருட்களையும் திருடியதை அறிந்துள்ளனர். இதைத் தொடர்ந்து அம்பத்தூர் சிவானந்த நகரைச் சேர்ந்த குட்டியம்மாள், அவரது தங்கை செல்வி, மேலும் சந்தோஷ், சஞ்சய் ஆகியோரை கைது செய்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட தலைமறைவான குட்டியம்மாளின் 18 வயதுடைய மகளையும் போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், 4 பேரை கைது செய்த அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்துறையினர், அவர்களை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.