உத்தரபிரதேசத்தில் கடந்த புதன்கிழமை இரவு தனியார் ஆப் வசதிகொண்ட ஒரு வாடகைக்காரை இரவு 11 மணியளவில் 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று கடத்திச் சென்றதாக அதன் ஓட்டுநர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
டைம்ஸ் ஆஃப் இந்தியா கொடுத்த தகவலின்படி, சதிஷ் மீனா என்ற அந்த ஓட்டுநருக்கு புதன்கிழமை இரவு 11 மணியளவில் நொய்டாவில் மமுரா பகுதியிலிருந்து ஒரு புக்கிங் வந்திருக்கிறது. அந்த இடத்திற்கு ஓட்டுநர் வந்தபோது, அங்கு காத்திருந்த 4 பேர் புக்கிங்கை கேன்சல் செய்யுமாறும், புக்கிங்கிற்கு மேல் 500 ரூபாய் சேர்த்துத் தருவதாகவும் கூறியிருக்கின்றனர்.
டிரைவர் காரை எடுத்தபோது, காரை லாக்செய்துவிட்டு ஓட்டுமாறு கூறியிருக்கின்றனர். பின்னால் அமர்ந்திருந்தவர்களில் ஒருவர் திடீரென முன்னால் தாவி, தன்னை பின்பக்க சீட்டிற்கு இழுத்து, கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதாகவும், முன்னால் தனக்கு அருகில் அமர்ந்திருந்தவர் காரை ஓட்ட ஆரம்பித்ததாகவும் ஓட்டுநர் போலீஸாரிடம் கூறியிருக்கிறார்.
மேலும், தன்னை அடித்து, தனது சட்டையை கழற்றி, கை மற்றும் முகத்தைக் கட்டிவிட்டதால் எந்தவழியாக சென்றார்கள் என்றும் தெரியவில்லை எனவும் அவர் கூறியிருக்கிறார். தனது மொபைலை பிடுங்கிக்கொண்டு மகாமயா மேம்பாலத்திற்கு 500 மீட்டர் முன்பு தன்னை வெளியே கீழே தள்ளிவிட்டு காரை ஓட்டிச்சென்றுவிட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
ஆனால், விசாரணையில் கார் ஓட்டுநர் முரணாக பதிலளிப்பதால் சந்தேகம் இருப்பதாக போலீஸார் கூறியுள்ளனர். எனவே அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி கேமிராக்களை பரிசோதித்துப் பார்த்துவிட்டுத்தான் முடிவுக்கு வரமுடியும் எனவும் கூறியுள்ளனர்.