செய்தியாளர் - சாந்த குமார்
சென்னை திருவான்மியூரில் இருந்து கூடுவாஞ்சேரி நோக்கிச் செல்லும் மாநகர பேருந்து, குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்ஸ் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது, அங்கே நின்று கொண்டிருந்த காரை உரசியபடி நெருக்கமாக நின்றுள்ளது. இதையடுத்து பேருந்து ஓட்டுநர் அசோக்குமார் ஹாரன் அடித்துள்ளார். அப்போது காரின் உரிமையாளர் பேருந்தின் உள்ளே ஏறி ஓட்டுநரை தாக்க ஆரம்பித்துள்ளார். அவருடன் வழக்கறிஞர் உடை அணிந்திருந்த பெண் உட்பட நான்கு பேர் சேர்ந்து அடித்துள்ளனர்.
இதனை வீடியோ எடுத்துள்ளார் நடத்துநர் இருசப்பன். இதை அறிந்த அவர்கள், இருசப்பனின் செல்போனை பறிக்க முயன்று அவரை ஆபாசமாக பேசி தாக்கியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஓட்டுநர் அந்த வழியே வந்த அனைத்து பேருந்துகளையும் நிறுத்தி தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஜி.எஸ்.டி.சாலையில் மறியலில் ஈடுபட்டார். தகவலறிந்து வந்த குரோம்பேட்டை போலீசார் அவர்களை சமாதானம் செய்து மறியலை கைவிட வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பேருந்து ஓட்டுநர் அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் குரோம்பேட்டை போலீசார் ஆபாசமாக பேசுவது, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுப்பது, மிரட்டல், தாக்குதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சட்டக்கல்லூரி மாணவி பிரதீபா ஷாலினி (25), அவரது கணவர் ரஞ்சித் (26), ஷாலினியின் தம்பி அஸ்வத் குமார் (22), ரஞ்சித் தம்பி திலிப் குமார் (25), உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.