மும்பையில் 26 வயது பெண்ணை கடத்தி மரத்தில் கட்டிவைத்து அடித்துத் துன்புறுத்திய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிப்ரவரி 19ஆம் தேதி மாலை மும்பையில் 26 வயதுப் பெண்ணுக்கு மயக்கமருந்து கொடுத்து, பிவந்தி காட்டுப்பகுதிக்கு கடத்திச்சென்றுள்ளனர். அங்கு அந்தப் பெண்ணை மரத்தில் கட்டிவைத்து அடித்து ஆடைகளை அகற்றி துன்புறுத்தியதுடன், தலையில் ஒருபக்க முடியையும் எடுத்து அவமானப்படுத்தியுள்ளனர். மேலும் இதை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு, சமூக ஊடகங்களில் பதிவிட்டு விடுவதாக மிரட்டியுள்ளனர். இதனால் அந்தப் பெண் இதுகுறித்து நிசம்புரா காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த வழக்கை அவர்கள் வாலிவ் காவல்நிலையத்திற்கு மாற்றினர்.
அந்த பெண்ணின் புகாரில் கூறியுள்ளதுபற்றி காவல் அதிகாரி சோவ்குலே கூறுகையில், ‘’அந்த பெண்ணுக்கு சின்சோதி நாகா பகுதியில் கரும்பு ஜூஸில் மயக்கமருந்து கலக்கி கொடுத்து, பிவந்தி காட்டுப்பகுதிக்கு கடத்திச் சென்றிருக்கின்றனர். அங்கு அந்தப் பெண்ணை மரத்தில் கட்டிவைத்து, ஆடைகளை அகற்றி, அடித்து துன்புறுத்தி வீடியோ எடுத்ததாகக் கூறியிருக்கிறார். அங்கிருந்து தப்பிவந்த அவர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்தப் பெண் அடையாளம் காட்டியதன்பேரில், ஒரு பெண் உட்பட 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஒருவர் மட்டும் தேடப்பட்டு வருகிறார்.
4 பேர்மீதும் இந்திய சட்டப்பிரிவுகள் 328, 354 மற்றும் 342இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் 2000ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்கீழும் அவர்கள்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என்று கூறினார். மேலும் ஏன் அந்தப் பெண்ணை கடத்தினார்கள் என்பது குறித்து விசாரித்துவருவதாகவும் கூறினார். மனதளவில் பாதிப்படைந்துள்ள பெண்ணுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.