அமைப்பில் யார் பெரியவர் என்பது தொடர்பாக வாட்ஸ்அப் குழுவில் கருத்து பதிவிடுவதில் ஏற்பட்ட தகராறில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சமையல் தொழிலாளி சுரேஷ் என்பவர் குத்திக் கொலை செய்யப்பட்டார். அவரது தாயருக்கும் கத்தி குத்து விழுந்து சிகிச்சைபெற்று வருகிறார். இப்பிரச்னை தொடர்பாக கயத்தார் போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர். மேலும், 4 பேரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கயத்தாறு சக்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் - ரேவதி தம்பதி. இவர்களின் மகன் சுரேஷ் (20). தந்தை பாலசுப்பிரமணியன் இறந்து 12 வருடங்களான நிலையில் தாயார் ரேவதி மற்றும் சகோதரி பிரியாவுடன் சுரேஷ் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். திண்டுக்கல்லில் கேட்டரிங் படிப்பு படித்துவந்த சுரேஷ் கடந்த கொரானோ காலகட்டத்தில் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார்.
தற்போது சமையல் மற்றும் பெயிண்டிங் வேலை பார்த்து வந்த அவர் தூத்துக்குடி மாவட்ட வெள்ளாளர் முன்னேற்ற கழக பொருளாளராக உள்ளார். இந்நிலையில், வெள்ளாள முன்னேற்ற கழக மாநில அமைப்பு செயலாளராக உள்ள பாளையங்கோட்டை சாந்திநகர் பகுதியைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் பரமசிவன் என்ற பந்தல்ராஜ் (31) தலைமையில் ஒரு குழுவும், மதுரை வெள்ளாளர் முன்னேற்ற கழக தென்மாவட்ட மகளிர் அணி தலைவி அன்னலட்சுமி தலையிலான ஒரு குழுவும் இயங்கிவருகிறது. பந்தல்ராஜ் ஆதரவாளர்களாக கயத்தாறை சேர்ந்த வெயில்முத்து, அஜித்கண்ணன் ஆகியோர் செயல்பட்டு வந்துள்ளனர். சுரேஷ் அன்னலட்சுமி ஆதரவாளராக செயல்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கயத்தாறு பகுதியில் வ.உ.சி பேரவை என்ற அமைப்பை உருவாக்கி பன்னீர்குளத்தை சேர்ந்த சங்கர் என்பவர் தலைவராகவும், சுரேஷ் பொருளாளராகவும் செயல்பட்டுள்ளனர். இதனை பந்தல்ராஜ் கண்டித்து என்னை மீறி எப்படி பேரவை நடத்துவாய் என்று பார்ப்போம் என சுரேஷிடம் சண்டையிட்டுள்ளார். இதனால் இவர்களுக்குள் தகராறு எழுந்துள்ளது. அடிக்கடி ஒருவருக்கொருவர் வாட்ஸ்அப் குழுவில் எதிர்எதிர் கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளனர். இதற்கிடையில் மருதநாயகம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்று தொடர்பாக பந்தல்ராஜ் வாட்ஸ் அப்குழுவில் பதிவு செய்ய, அதற்கு சுரேஷ் ஒரு கருத்து கூற இருவருக்கும் நேற்று கருத்து மோதல் ஏற்பட்டது. மேலும் தனிப்பட்ட முறையிலும் இருவரும் வாடஸ் அப்பில் கருத்து மோதிலில் ஈடுபட்டுள்ளனர். தைரியமாக இருந்தால் எங்கள் ஊருக்கு வந்து பார் என்று சுரேஷ் கேட்க, பந்தல்ராஜா வருவதாகக் கூறி உரையாடலை முடித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு சுரேஷின் தாயார் ரேவதி மற்றும் சகோதிரி பிரியா இரவு உணவை முடித்துவிட்டு வீட்டு திண்ணையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். சுரேஷ் படுக்கை அறையில் செல்போனை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது பந்தல்ராஜ் உட்பட 5 பேர் கொண்ட கும்பல் ரேவதியிடம் வந்து உனது மகன் சுரேஷ் எங்கே என கேட்டு வீட்டினுள் நுழைந்து படுக்கை அறையில் அமர்ந்திருந்த சுரேஷ்வுடன் பேரவை அமைத்தது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். தகராறு முற்றவே பந்தல்ராஜ் தான் மறைத்துவைத்திருந்த கத்தியால் சுரேசை நெஞ்சில் சரமாரியாக குத்தியதாக தெரிகிறது. அதனை தடுக்கவந்த தாயார் ரேவதிக்கும் கையில் காயம் ஏற்பட்டது. பின்பு கொலைக் கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலையடுத்து விரைந்துவந்த கயத்தாறு போலீசார் ரத்த வெள்ளத்தில் போராடிக்கொண்டிருந்த சுரேஷையும், தாயார் ரேவதியையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சுரேஷை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். காயமடைந்த ரேவதி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.
இந்நிலையில், கயத்தாறு காவல்நிலைய போலீசார் இச்சம்பவம் பற்றி விசாரணை நடத்தி இச்சம்பவத்தில் ஈடுபட்ட வெள்ளாளர் முன்னேற்ற கழக மாநில அமைப்பு செயலாளர் பாளையங்கோட்டை சாந்திநகரை சேர்ந்த பரமசிவன் என்ற பந்தல்ராஜ் (34), கயத்தாறு சுடலைமாடன் கோவில் தெருவை அஜித் கண்ணன் (27), பாளையங்கோட்டை எம்கேபி நகர், காமராஜர் தெருவை சேர்ந்த் மார்ட்டீன் (21), பாளையங்கோட்டை கணம்புள்ள நயினார் தெருவை சேர்ந்த இசக்கிராஜா (27) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கயத்தாறு கோட்டைபிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர்களான வெயில்முத்து (44), மாரியப்பன் (20), பாளைங்கோட்டையை பிரபாகரன் (24), கயத்தாறு கோட்டைபிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ஜெயமணி (21) ஆகிய 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரு அமைப்பில் யார் பெரியவர் என இரண்டு கோஷ்டிகளுக்கு இடையே சமூக வலைதளம் மூலம் நடந்த சண்டை கொலையில் முடிந்தது கயத்தாறு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொலையாளிகளிடம் இருந்து கொலைச் சம்பவத்திற்கு பயன்படுத்திய ஒரு காரும், இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.