”அவதூறு பரப்பிவிடுவதாக மிரட்டுகிறார்கள்”-கோவையில் இணையத்தள கடன் செயலி மீது இளம்பெண் புகார்

”அவதூறு பரப்பிவிடுவதாக மிரட்டுகிறார்கள்”-கோவையில் இணையத்தள கடன் செயலி மீது இளம்பெண் புகார்
”அவதூறு பரப்பிவிடுவதாக மிரட்டுகிறார்கள்”-கோவையில் இணையத்தள கடன் செயலி மீது இளம்பெண் புகார்
Published on

கோவையில் கடனை திருப்பி செலுத்த கால தாமதமானதால் அவதூறு பரப்பிவிடுவதாக மிரட்டல் விடுத்த இணையதள கடன் செயலிமீது இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் 2 பெண்கள் உட்பட செயலி நடத்தி வந்த நிறுவன ஊழியர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுவாதி(24). இவர் சாய்பாபா காலனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வருகின்றார். இவர் ஆன்லைன் மூலம் கடன்வழங்கும் 30க்கும் மேற்பட்ட செயலிகளில் 64 ஆயிரம் ரூபாய் வரை கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில், அவர் கோவை மாவட்ட சைபர் கிரைம் பிரிவில் Smart loan app என்ற நிறுவனம் மீது புகார் அளித்தார். அதில் Smart loan appல் கடன் வாங்கிய நிலையில் பணத்தை திருப்பி செலுத்த காலதாமதமானதால் தன்னை செல்போனில் அழைத்து அவதூறாக பேசுவதுடன், தனது செல்போனில் உள்ள எண்களுக்கு தனது புகைப்படத்தை அனுப்பி தவறான தகவல்களை அனுப்புவதாகவும் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் புகார் அளித்தார்.

இந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் அழைப்புவந்த எண்களை ஆராய்ந்தனர். அப்போது அந்த அழைப்புகள் பெங்களூரில் இருந்து வந்திருப்பதை அறிந்து அங்கு சென்றனர். வீட்டில் இருந்தபடி பணியாற்றும் Smart loan app நிறுவன ஊழியர்கள் 4 பேரை கைதுசெய்த கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் அவர்களை கோவை அழைத்து விசாரணை செய்தனர். Smart loan app மேலாளர் அர்ஷயா, கஸ்டமர் சர்வீஸ் பொறுப்பாளர் பர்வின் ஆகிய இரு பெண்களையும், உதவி மேலாளர் ரகுமான், டெலி காலிங் பொறுப்பாளர் யாசின் ஆகிய இரு இளைஞர்கள் என 4 பேர் மீதும் மோசடி, தகவல் தொழில் நுட்ப சட்டம் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், இந்த Smart loan app உரிமையாளர் சன்னி என்பவர் குறித்தும் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். Smart loan app நிறுவன ஊழியர்கள் 4 பேரும், அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சன்னியை பார்த்தது கிடையாது என்பதும், ஆன்லைன் மூலம் தொடர்புகொள்ளும் அவர் என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டும் தெரிவித்து வந்திருப்பதும், ஒரு வருடத்துக்கு முன்பாக இந்த நிறுவனம் துவங்கி இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. நிறுவன உரிமையாளர் சன்னி இந்தியாவில் இருக்கின்றாரா அல்லது வெளிநாட்டில் இருந்து இயக்குகின்றாரா என்பது குறித்தும் பிற கடன் செயலிகள் குறித்தும் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com