மயிலாடுதுறை அருகே திமுக பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் அரியலூர் மாவட்ட நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
மயிலாடுதுறை அருகே சேந்தங்குடி துர்க்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் பாபு (45). திமுக நகர செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர் மீது நல்லாசிரியர் நீலகண்டன் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பாபு நேற்று இரவு 10 மணிக்கு கடை வீதிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் அருகே உள்ள குளக்கரையில் மறைந்திருந்த மர்மக் கும்பல் பாபுவை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓடியது. இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று பாபுவின் கூட்டாளிகளான அரியலூர் மாவட்டம் பாப்பாகுடி கிராமத்தைச் சேர்ந்த மனோகரன் (33), மயிலாடுதுறை பகுதிகளைச் சேர்ந்த சேந்தங்குடி மாதவன் (26), திருவழுந்தூர் பாரதிராஜா (28), மாப்படுகை வெங்கடேஷ் (21), ஆகிய 4 பேரும் அரியலூர் மாவட்டம் செந்துறை மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கம் முன்னிலையில் சரணடைந்தனர். அவர்கள் 4 பேரையும் 7 நாட்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.