கடந்த 6 நாட்களாக நடத்தப்பட்டு வரும் சோதனையில் ரயில் மூலமாக கடத்தி வரப்பட்ட 37.5 கிலோ கஞ்சாவை சென்ட்ரல் ரயில்வே காவல்துறை பறிமுதல் செய்துள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு இன்று அதிகாலையில் ஹவுரா விரைவு ரயில் வந்தது. அப்போது ரயில்வே காவல்துறை டிஎஸ்பி முத்துகுமார் தலைமையிலான காவல்துறையினர் பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் ஒருவரது பையை சோதனை செய்த போது, அதில் 6 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. உடனே அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர் ஓடிசாவை சேர்ந்த மதாப் குமார் தாஸ் (Madhab Kumar Das) என்பவர் என்று தெரிந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் `எங்கிருந்து கஞ்சாவை எடுத்து வந்தார், யாருக்கு கொடுப்பதற்காக கொண்டு செல்கிறார்' என்பது தொடர்பாக ரயில்வே காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 31-ம்தேதியில் இருந்து இந்த மாதம் 3-ம்தேதி வரை கடத்தி வரப்பட்ட 31.5 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் கண்டறிந்து பறிமுதல் செய்துள்ளனர். தற்போது கூடுதலாக 6 கிலோ கஞ்சா சிக்கி உள்ளது. ஆபரேசன் கஞ்சா வேட்டை 2.0 சோதனை தொடரும் என ரயில்வே காவல் துறை தெரிவித்துள்ளது.