எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளையர்கள், தங்களது கொள்ளைக்கு பயன்படுத்திய 30 ஏடிஎம் கார்டுகளின் வங்கி கணக்குகளை சென்னை காவல்துறை முடக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பாரத வங்கி ஏ.டி.எம் டெபாசிட் இயந்திரங்களில் ஹரியானா மாநில கொள்ளை கும்பல் நூதன முறையில் தங்களின் கைவரிசையைக் காட்டி லட்சக் கணக்கில் கொள்ளையடித்துச் சென்றனர். குறிப்பாக சென்னையில் 17 ஏடிஎம்களில் ஹரியானா கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.
சி.சி.டி.வி காட்சிகள் மூலம் கொள்ளையர்கள் அடையாளம் காணப்பட்டு இதுவரை இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஹரியானா மாநில கொள்ளையர்கள் அமீர் அர்ஷ், வீரேந்தர ராவத் மற்றும் நஜீம் உசைன் ஆகிய 3 பேரையும், கொள்ளை கும்பலுக்கு தலைவனாக செயல்பட்ட சவுக்கத் அலி என்பவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், கொள்ளையர்கள் கொள்ளையடிக்க பயன்படுத்திய ஏ.டி.எம் கார்டுகளின் 30 வங்கிக் கணக்குகளை சென்னை காவல் துறையினர் முடக்கியுள்ளனர். மேலும், தமிழகம் போன்று நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஹரியானா கொள்ளையர்கள் தங்களின் கைவரிசையைக் காட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.
கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக மற்ற மாநில காவல்துறையினர் உதவி கோரும் பட்சத்தில் அவர்களுக்கு உதவத் தயாராக இருப்பதாகவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டிருந்தாலும் ஹரியானா கொள்ளையர்களை சென்னை போலீசார் மட்டுமே கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.