யு-டியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த மூன்று பேரை ஓமலூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தேசிய குற்றப்புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கடந்த மே மாதம் 20-ம் தேதி ஓமலூர் காவல் நிலைய போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது துப்பாக்கி, கத்தி, முகமூடி உள்ளிட்ட பொருட்களுடன் வந்த இரண்டு இளைஞர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது இருவரும் யு-டியூபை பார்த்து துப்பாக்கி தயாரித்தது தெரியவந்தது.
இதில், சேலம் மாநகரை சேர்ந்த நவீன் சக்கரவர்த்தி, சஞ்சய் பிரகாஷ், கபிலர் ஆகிய மூன்று பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து துப்பாக்கி, கத்தி, முகமூடி மற்றும் துப்பாக்கி செய்வதற்கு பயன்படுத்திய பல்வேறு பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து ஓமலூர் போலீசார் மூன்று பேரையும் நீதிமன்ற காவலில் எடுத்து நடத்திய விசாரணையில் மூன்று பேரும் ஒரு அமைப்பை உருவாக்கி தங்களது கொள்கையை ஏற்று வருபவர்களை அமைப்பில் சேர்த்து மக்களுக்கு நன்மை செய்யும் எண்ணத்தில் இருந்தததாக கூறியுள்ளனர்.
இதையடுத்து இந்த வழக்கை சேலம் மாவட்ட க்யூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாகவும், குற்றவாளிகளை கைது செய்த போலீசாரிடமும் தேசிய குற்றப்புலனாய்வு அமைப்பு போலீசார் விசாரணை நடத்தினர். குற்றவாளிகள் குறித்தும், அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணை குறித்தும், குற்றவாளிகளின் செயல்பாடுகள் குறித்தும், குற்றவாளிகள் போலீசாரிடம் பேசியது குறித்தும் விசாரணை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து அவர்கள் தங்கியிருந்த வீடு, துப்பாக்கி தயாரிப்பதற்கு முன்பாக அவர்களின் செயல்பாடுகள், அவர்கள் ஏதாவது அமைப்புடன் தொடர்பில் உள்ளார்களா, அவர்களிடம் பேசிய நபர்கள் யார் யார் என்பது போன்ற தகவல்களையும் தேசிய குற்றப்புலனாய்வு அமைப்பு போலீசார் விசாரித்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாகவும், குற்றவாளிகள் குறித்தும் ஓமலூர் குற்றப்பிரிவு போலீசார் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் கைதான மூன்று இளைஞர்களும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.