ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் ரூ.1.46 கோடி பண மோசடி செய்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியிடமிருந்து டிராவல் வேன் மற்றும் சரக்கு வேன் உட்பட ரூ 1.89 லட்சம் பணமும் பறிமுதல் செய்துள்ளது வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஹரியானா மாநிலத்தில் காய்கறிகள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் தனியார் நிறுவனத்தில், வேலூர் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த சீதாராமன் என்பவர் ஏஜெண்டாக இருந்து வந்துள்ளார். காய்கறிகளை ஏற்றுமதி செய்வதற்காக அந்த தனியார் நிறுவனத்திடம் இருந்து 1 கோடியே 80 லட்சம் ரூபாயை சீதாராமன் முன்பணமாக பெற்றுள்ளார்.
இதையடுத்து காய்கறிகளை அனுப்பாமல் பணத்தையும் திருப்பித் தராமல் மாதக் கணக்கில் சீதாராமன் ஏமாற்றி வந்துள்ளார். 70 லட்சம் ரூபாய் மட்டுமே திருப்பி செலுத்திய நிலையில் மீதமுள்ள 1 கோடியே 10 லட்சம் ரூபாய் பணத்தை செலுத்தியதாக போலியான ரசீதை தயார் செய்து ஹரியானா நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளார் அவர்.
இதே போல் திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த சரண்ராஜ் என்பவரும் 36 லட்சம் ரூபாயை தனியார் நிறுவனத்திடம் இருந்து பெற்று ஏமாற்றி வந்த நிலையில், சீதாராமன் உதவியுடன் 36 லட்சம் ரூபாயை தனியார் நிறுவனத்திற்குச் செலுத்தியது போல போலியான பில் தயாரித்து ஹரியானா நிறுவனத்தை ஏமாற்றியுள்ளார்.
இந்த மோசடி விவகாரம் தொடர்பாக வேலூர் குற்றப்பிரிவு காவலர்கள் சீதாராமன், அவரது மனைவி விஜிதா, சதீஷ்குமார், சரவணன், வசந்தகுமார் மற்றும் சரண்ராஜ் என ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சீதாராமன், சதீஷ்குமார், சரவணன் ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ள வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், கடந்த 24 ஆம் தேதி அவர்களை நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட முக்கிய குற்றவாளி சீதாராமனை குற்றப்பிரிவு போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையின் அடிப்படையில் காய்கறிகளை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் நிறுவனத்திடம் இருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றி அதன் மூலம் வாங்கிய டிராவல் வேன், சரக்கு வேன் மற்றும் நில ஆவணம் மற்றும் வங்கி கணக்கிலிருந்து 1.89 லட்சம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து மீண்டும் அவரை சிறையில் அடைத்தனர்.