செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்
ஆவடி அடுத்த மோரை திருமலை நகரில் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை சோதனை செய்தபோது, அதில் பாலிதீன் கவரில் சுற்றி கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து ஆட்டோவில் இருந்த நபர்களை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
விசாரணையில், அவர்கள் பாக்கம் பகுதியைச் சேர்ந்த செல்வம், ஐயப்பன், ஆவடி காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த சரத், திருநின்றவூர் நத்தமேடு பகுதியைச் சேர்ந்த முரளி என்பது தெரியவந்தது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து, 4 பேரையும் கைது செய்துள்ள ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், அவர்களிடமிருந்த 3 கிலோ கஞ்சா, 4 செல்போன் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்ட செல்வம் என்பவர் மீது கொலை வழக்கு உள்ளதும் செல்வம் மற்றும் ஐயப்பன் ஆகிய இருவரும் சகோதரர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.