தேனாம்பேட்டை மற்றும் திருவல்லிக்கேணி பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அபாயகரமாகவும், அதிவேகமாகவும் இருசக்கர வாகனங்களை ஓட்டிய 5 நபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னையில் பைக் ரேஸ் என்ற பெயரில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாகவும், அபாயகரமாகவும், வீலிங் என்ற பெயரில் ஆபத்தான முறையிலும் வாகனங்களை ஓட்டி சாகசத்தில் ஈடுபடாமல் தடுக்க சென்னை காவல் ஆணையார் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில், போக்குவரத்து போலீசார் சட்டம் & ஒழுங்கு மற்றும் ஆயுதப்படைக் காவலர்கள் அடங்கிய காவல் குழுவினர் ஒருங்கிணைந்து, சென்னை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தீவிரமாக கண்காணித்து, கைது செய்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக கடந்த 25 அன்று அதிகாலை சுமார் 1.30 மணியளவில், அண்ணாசாலை, அண்ணா மேம்பாலம் அருகே சிலர் சுமார் 10 இருசக்கர வாகனங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அபாயகரமாகவும், அதிவேகமாகவும் ஓட்டியதாக கிடைத்த புகாரின்பேரில், காவல் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றபோது, அந்த நபர்கள் இருசக்கர வாகனங்களுடன் தப்பிச் சென்றது தெரியவந்தது. சம்பவம் குறித்து R-4 பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.
சம்பவ இடத்தினருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்து, மேற்படி சம்பவத்தில் அபாயகரமாகவும், அதிவேகமாகவும் இருசக்கர வாகனத்தை ஓட்டிய திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த ஆகாஷ், சரண்ராஜ், பிரதீப், சையது அராபத், சூரியா ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 டியோ இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள், விசாரணைக்குப் பின்னர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.