திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலச்சந்தர் (45). இவர், துப்பாக்கி தொழிற்சாலையில் பாதுகாப்பு துறை அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரேணுகா (40), அண்ணா நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், கடந்த மாதம் 23 ஆம் தேதி இவர்கள் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 52 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இச்சம்பவம் குறித்து நவல்பட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.
இவ்வழக்கில் துவாகுடி பாரதியார் தெருவைச் சேர்ந்த கௌதம் என்ற தேஜா (24) என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர், அவரது மனைவி அபிநயா (22) மற்றும் கேரள மாநிலம் பாலக்காடு சந்திராபுரம் வலையார் பாப்பு பாறையைச் சேர்ந்த பாபு என்ற ஏசுதாஸ் (39) ஆகியோருக்கு திருட்டில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
அதையடுத்து அவர்கள் மூன்று பேரையும் நவல்பட்டு போலீசார் கைது செய்ததோடு அவர்களிடமிருந்து திருடு போன 52 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து மூன்று பேரையும் திருச்சி ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.