தீரன் பட பாணியில் பகலில் லாரி ஓட்டுநர்கள்... இரவில் கொள்ளையர்கள் - மடக்கிப் பிடித்த போலீஸ்

தீரன் பட பாணியில் பகலில் லாரி ஓட்டுநர்கள்... இரவில் கொள்ளையர்கள் - மடக்கிப் பிடித்த போலீஸ்
தீரன் பட பாணியில் பகலில் லாரி ஓட்டுநர்கள்... இரவில் கொள்ளையர்கள் - மடக்கிப் பிடித்த போலீஸ்
Published on

நாமக்கல் அருகே ஏ.டி.எம் கொள்ளை வழக்கில் ஹரியானாவைச் சேர்ந்த சகோதரர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் அடுத்துள்ள பாச்சல் அருகே உள்ள தனியார் கல்வி நிறுவனங்களின் வளாகத்தில் யூனியன் வங்கி ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி ஏ.டி.எம் மையத்தில் கடந்த 5-ம் தேதி அதிகாலை திடீரென தீப்பற்றி எரிந்ததில் அதிலிருந்த 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணம் எரிந்து சாம்பலானது. இச்சம்பவம் குறித்து வங்கி மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் புதுசத்திரம் போலீசார் வழக்குப் பதிவு ஆய்வாளர் மகாலட்சுமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது கல்லூரி வளாகம், ஏ.டி.எம் மையம், நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களின் மூலம் கிடைத்த காட்சிகளை கொண்டு விசாரணை செய்தனர். அதில் 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று ஏ.டி.எம் மையத்தில் வெல்டிங் இயந்திரத்துடன் உள்ளே சென்று விட்டு வெளியே வரும்போது ஏ.டி.எம் இயந்திரம் தீப்பற்றி எரிந்தது தெரிய வந்தது. இதையடுத்து புதுசத்திரம் போலீசார் பாச்சல் பிரிவு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது HR 73 A 8408 என்ற எண் கொண்ட டாரஸ் லாரியை நிறுத்திய போது அதிலிருந்த 3 பேர் தப்பி ஓடியுள்ளனர்.

அவர்களை காவல் துறையினர் மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டதில் 3 பேரும் ஹரியானா மாநிலம் பல்வால் மாவட்டத்தைச் சேர்ந்த சைகுல், முகமது சராபத், முகமது ஜீனித் என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் 3 பேரும் கடந்த 5-ம் தேதி ஹரியானாவில் இருந்து மதுரைக்கு லாரியில் சரக்குகளை ஏற்றி சென்று இறக்கி விட்டு, லோடு ஏதும் இல்லாத நிலையில் ஆந்திரா நோக்கி திரும்பச் சென்றுள்ளனர். அப்போது ஆள் நடமாட்டம் இல்லாத யூனியன் வங்கி ஏ.டி.எம்-ல் வெல்டிங் இயந்திரம் கொண்டு கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

மேலும் ஏடிஎம் மிஷினில் திடீரென தீபற்றி கொண்டதால் வெல்டிங் இயந்திரத்தை எடுத்து கொண்டு தப்பி விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து 3 பேரையும் கைது செய்த புதுசத்திரம் போலீசார் கொள்ளைக்கு பயன்படுத்திய லாரி மற்றும் வெல்டிங் இயந்திரத்தினையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சைகுல் மற்றும் முகமது சராபத் இருவரும் சகோதரர்கள் ஆவர்.

தீரன் படத்தில் வருவது போல் பகலில் லாரி ஓட்டுநர்களாக இருக்கும் இவர்கள், ஆள் நடமாட்டம், காவலர் இல்லாத ஏ.டி.எம் களை கண்டறிந்து இரவில் கொள்ளையடிப்பார்கள். துரிதமாக செயல்பட்டு கொள்ளை கும்பலை கைது செய்த போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com