முன்னாள் அமைச்சர் மகனிடம் மோசடி செய்த பணத்தில் படம் தயாரிப்பு... 3 பேர் கைது

முன்னாள் அமைச்சர் மகனிடம் மோசடி செய்த பணத்தில் படம் தயாரிப்பு... 3 பேர் கைது
முன்னாள் அமைச்சர் மகனிடம் மோசடி செய்த பணத்தில் படம் தயாரிப்பு... 3 பேர் கைது
Published on

முன்னாள் அமைச்சர் மகனின் நிறுவனத்தில் 30 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு, அந்தப் பணத்தில் திரைப்படம் தயாரித்த இலங்கை தமிழர் உட்பட 3 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையைச் சேர்ந்த கு.லாரன்ஸ் 1991-ம் ஆண்டு பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் 1993 முதல் 1996 வரை வனத்துறை அமைச்சராக இருந்தார். அதிமுக மாவட்ட செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார். 2006இல் திமுகவில் இணைந்த லாரன்ஸ் மாநில சிறுபான்மையினரணி துணை செயலாளராக இருந்து வந்தார். பின்னர் உடல் நலக்குறைவால் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார்.

முன்னாள் அமைச்சர் லாரன்ஸின் மகன் ஆண்டோ ஸ்டாலின், பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு மோசடி புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் கடந்த 2012 ஆம் ஆண்டு சென்னை அயனாவரத்தில் நிதி நிறுவனம் ஒன்று தொடங்கியதாகவும், நிதி நிறுவன தொழிலில் முன் அனுபவம் இல்லாததால் நிதி நிறுவனங்களில் இடைத்தரகராக பணிபுரிந்த ரமேஷ் என்பவரை தனது நிறுவனத்தில் மேலாளராக பணி அமர்த்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

6 வருடங்களாக நிதி நிறுவனத்தில் பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டதால், கடந்த 2018ஆம் ஆண்டு நிதி நிறுவனத்தின் கணக்குகளை சரிப்பார்த்தபோது 30 கோடி ரூபாய் வரை மோசடி செய்யப்பட்டிருந்தது தெரியவந்ததாகத் தெரிவித்துள்ளார். மேலும் தனது நிறுவனத்தில் பணியாற்றி வந்த மேலாளரான ரமேஷ், அவரது கூட்டாளியான சுதாகர், சாய் சரவணன், ரமேஷின் இரண்டாவது மனைவியான பிரேமசுதா ஆகியோருடன் இணைந்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்ததாகவும் கூறியுள்ளார்.

குறிப்பாக ரமேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் இணைந்து 116 போலியான நிறுவனங்களை உருவாக்கி, அந்த நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி தங்கள் நிறுவனத்திலிருந்து 30 கோடி ரூபாய் வரை பைனான்ஸ் பெற்று மோசடி செய்தது தெரியவந்ததாக கூறியுள்ளார். மேலும் மோசடி பணத்தை உடனடியாக ரமேஷின் இரண்டாம் மனைவியான பிரேமசுதாவின் வங்கிக் கணக்கிற்கு மாற்றியதையும் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் மோசடி செய்த பணத்தில் சுதாகரன், கடந்த 2017-ஆம் ஆண்டு கலையரசன் நடிப்பில் உருவான ’எய்தவன்’ திரைப்படத்தை தயாரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி செய்த மேலாளர் ரமேஷை கடந்த டிசம்பர் மாதத்தில் கைது செய்ததாகவும், தற்போது ரமேஷின் இரண்டாவது மனைவி பிரேமசுதா மற்றும் சுதாகரன் என மொத்தம் 3 பேரை இதுவரை போலீசார் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சுதாகர் இலங்கை தமிழர் என்பதும், இந்திய பாஸ்ஃபோர்ட் மூலமாக தமிழகத்தில் தங்கி வந்ததையும் கண்டுபிடித்ததாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மோசடி செய்த பணத்தில் வாங்கப்பட்ட பி.எம்.டபுள்யூ உள்ளிட்ட 4 கார், 5 கோடி மதிப்புள்ள சொத்துகளை பொருளாதார குற்றப்பிரிவு முடக்கி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

நிதி நிறுவனம் மூலம் பல்வேறு மோசடியில் ஈடுபட்ட ரமேஷ் மற்றும் அவர்கள் கூட்டாளிகளிடம் இருந்து மோசடி செய்யப்பட்ட 30 கோடி ரூபாய் பணத்தை மீட்டு போலீசார் ஒப்படைக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். இந்த நிலையில் ஆண்டோ ஸ்டாலினிடம் மோசடி செய்த பணத்தை, தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு சுதாகரன் பயன்படுத்தி உள்ளாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர் என்றும், மேலும், தலைமறைவாக உள்ள சாய்சரவணன் உட்பட ரமேஷின் உறவினர்களான கீதாவானி, வேணுகோபால் ஆகியோரை தீவிரமாக தேடிவருவதாகவும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com