செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல் பிரசன்னகுமார்
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே பக்காலபள்ளி பகுதியில் சிலர் கள்ளத்தனமாக ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு கடத்துவதாக ரகசிய தகவல் வந்துள்ளது. அதன் அடிப்படையில் வேலூர் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்பிரிவு புலனாய்வு அதிகாரிகள் பக்காலபள்ளி பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு வீட்டில் இருந்து சிலர் ரேஷன் அரிசியை வேனில் ஏற்றிக் கொண்டிருந்தனர். அவர்களை சுற்றி வளைத்த அதிகாரிகள், விசாரணை நடத்தினர். அதன்முடிவில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் குமார் (28) மற்றும் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த கதிரவன் (38) அருண் (22) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து நான்கு டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட அரிசி, குடியாத்தம் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து வேலூர் குடிமைப் பொருள் வழங்கள் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.