மதுரையில் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக இரண்டு வாரத்தில் மட்டும் 26 ரவுடிகள் கைது செய்யப்பட்டு பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகர் பகுதிகளுக்குட்பட்ட 22 காவல் நிலையங்களில் 2000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள், இந்த நிலையில் மதுரை மாநகர் பகுதிகளான எல்லீஸ்நகர், ஜெய்ஹிந்துபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக மட்டும் பட்டப்பகலில் பொது இடத்தில் கொடூர கொலைகள் நடைபெற்றது. தொடர்ந்து அரங்கேறும் கொலைச்சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருந்ததை கட்டுப்படுத்தும் விதமாக மதுரை மாநகர காவல் துறை ஆணையர் தலைமையில் பல தனிப்படைகள் அமைக்கப்பட்டு ரவுடிகள் பதுங்கி இருக்கும் முட்புதர்கள், பாழடைந்த கட்டடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை செய்தனர்.
இந்நிலையில், முன்விரோதத்தின் காரணமாக கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக 15 நாட்களில் சுமார் 26 பிரபல ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் இருந்து கத்தி அரிவாள், வாள் என நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மீது கொலைமுயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் மதுரை மாநகர காவல்துறை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.