அதுமட்டுமல்லாமல் சிறுமியை கடத்த உதவி செய்து திருமணம் முடித்து வைத்ததற்காக, குற்றவாளி சுரேஷ்குமாரின் அக்கா மற்றும் அக்காவின் கணவர் ஆகிய இருவருக்கும், 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் அதிரடி உத்தரவிட்டுள்ளது மகிளா நீதிமன்றம்.
2016ஆம் ஆண்டு தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் என்ற இளைஞர், 17 வயது சிறுமியிடம் திருமண ஆசை வார்த்தை கூறி பழகி வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து சுரேஷ்குமாரின் தந்தை காளிமுத்து மற்றும் அவரது தாய் பேபி அம்மாள் ஆகிய மூவரும் சேர்ந்து, சிறுமியை காரில் ஏற்றிக்கொண்டு கேரளாவில் உள்ள சுரேஷ்குமாரின் பெரியப்பா மகள் ஜெயா வீட்டிற்கு கடத்திச் சென்றுள்ளனர். அங்கு வைத்து சுரேஷ்குமாருக்கும், 17 வயது சிறுமிக்கும் அவர்கள் வீட்டில் வைத்து திருமணம் நடத்தி வைத்துள்ளனர்.
இந்நிலையில் சிறுமியின் தாய் ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் சிறுமியைக் காணவில்லை என கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறுமியை தேடிவந்துள்ளனர். தேடலின்போது சிறுமி இருக்கும் இடம் தெரிந்து, கேரளாவில் உள்ள சுரேஷ்குமாரின் அக்கா வீட்டில் இருந்து சிறுமி மீட்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து சிறுமியை கடத்தித் திருமணம் முடித்ததாக சுரேஷ்குமார், அவரது தந்தை காளிமுத்து, தாய் பேபி அம்மாள், அக்கா ஜெயா மற்றும் அக்காவின் கணவர் சோமன் ஆகிய ஐந்து பேர் மீதும் ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பின்னர் வழக்கு விசாரணையானது தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கு விசாரணை முடிவடைந்து இன்று குற்றவாளிகள் ஐந்து பேருக்கும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதில் இளைஞர் சுரேஷ்குமார் மற்றும் அவரின் தந்தை காளிமுத்து, தாய் பேபி அம்மாள் ஆகிய மூவருக்கும் ஆள் கடத்தல், குழந்தைத் திருமணம், போக்சோ சட்டம் ஆகிய மூன்று பிரிவின் கீழ் மூவருக்கும் தலா 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் தலா 15 ஆயிரம் ரூபாய் அபராதமும், அபராதத் தொகையை கட்டத் தவறினால் மேலும் 4 வருடம் மெய்க் காவல் சிறைத் தண்டனையும் வழங்கி அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிறுமியைக் கடத்தியதற்கும், குழந்தைத் திருமணத்திற்கு உதவியாக இருந்த காளிமுத்துவின் அண்ணன் மகள் ஜெயா மற்றும் அவரது கணவர் சோமன் ஆகிய இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 10000 ரூபாய் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் இரண்டு வருடம் மெய்க்காவல் சிறை தண்டனையை வழங்கி, தேனி மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி திலகம் அதிரடித் தீர்ப்பு வழங்கினார்.
சிறுமியின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு மூன்று லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து குற்றவாளிகள் ஐந்து பேரும், மதுரை மத்திய சிறையில் அடைக்க காவல்துறையினர் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.