புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் கூட்டுறவு வங்கியில் முறைகேட்டில் ஈடுபட்டதாக வங்கி செயலாளர், மேற்பார்வையாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் கூட்டுறவு நிலவள வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் சுற்றுவட்டாரத்திலுள்ள பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் கணக்கு வைத்துள்ளனர். தற்போது அரசு கூட்டுறவு வங்கி நகைக்கடனை தள்ளுபடி செய்திருக்கிறது. இந்நிலையில் பல்வேறு மாவட்டத்தில் நகைக்கடனில் முறைகேடு இருப்பதாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வரிசையில், கீரனூர் கூட்டுறவு வங்கியில் ஆய்வு செய்தபோது நகை இல்லாமல் உறவினர் பெயரில் ரூ.1.8 கோடிக்கு நகைக்கடன் முறைகேடு செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து கீரனூர் கூட்டுறவு வங்கியின் செயலாளர் நீலகண்டன், மேற்பார்வையாளர் சக்திவேல் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் நகை மதிப்பீட்டாளர் கனகவேல் வங்கிப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் முறைகேடு செய்த பணத்தில் கிட்டத்தட்ட 90 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.