திருவாரூரை அடுத்த நீலக்குடி பகுதியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகத்தில் சுமார் 3000-த்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று இந்த பல்கலைக் கழகத்தில் பயிலும் கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த முதலாமாண்டு மாணவி டேவிட் சந்தனா, சென்னையைச் சேர்ந்த இரண்டாமாண்டு மாணவி சரண்யா ஆகிய இருவரும் கங்களாஞ்சேரி பகுதியில் உள்ள ஏடிஎம்-ல் பணம் எடுத்துக்கொண்டு அங்குள்ள தனியார் உணவகத்திற்கு சாப்பிடச் சென்றுள்ளனர்.
அப்போது அங்கு கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த வண்டாம்பாளை பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் செல்வதுரை, வந்தராஜ் உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பல் உணவகத்தின் உள்ளே நுழைந்து மாணவிகளிடம் இருந்து பணம் மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு உணவகத்தில் இருந்தவர்களை கடுமையாக தாக்கியதோடு உணவகத்தையும் அடித்து நொறுக்கி சூரையாடினர்.
இதில், படுகாயமடைந்த மாணவிகள் டேவிட் சந்தனா, சரண்யா ஆகிய இருவரும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள திருக்கண்ணபுரம் போலீசார் மாணவிகளை தாக்கி உணவத்தை சூரையாடிய செல்வராஜ், வந்தராஜ் ஆகிய இருவரை கைது செய்து மேலும் 4 பேரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.