ஒட்டன்சத்திரம் அருகே பைனான்ஸ் நிறுவனத்தின் பங்குதாரராக சேர்ப்பதாகக் கூறி ரூ 35 லட்சம் மோசடி செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக அதிமுக ஒன்றிய செயலாளர் தம்பி உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள அம்பிளிக்கை பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி (வயது 60). இவரது கணவர் திருமலைசாமி. இருவரையும் தொழில் ரீதியாக அணுகிய அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார், கொசவபட்டியைச் சேர்ந்த காளிமுத்து ஆகிய இருவரும் தங்களை ’அம்மன் அருள்’ என்ற பெயரில் பைனான்ஸ் நிதி நிறுவனம் நடத்தி வருவதாகவும், இதில் பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாகவும் கூறியுள்ளனர்.
இதனை நம்பி லட்சுமி கடந்த 2014ம் ஆண்டு ரூ 10 லட்சம் மற்றும் 2017ம் ஆண்டு 25 லட்சம் என மொத்தம் ரூ 35 லட்சம் கொடுத்துள்ளனர் திருமலைசாமி - லட்சுமி தம்பதி. ஆனால் இதுவரை கொடுத்த தொகைக்கான லாப பங்கு எதுவும் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த லட்சுமி தனது பணத்தை திரும்பத் தருமாறும் அதற்கான லாப பங்குத்தொகையை தருமாறும் கேட்டுள்ளார். பணம் கேட்ட தன்னை நிதி நிறுவன அதிபர்கள் செந்தில்குமார் மற்றும் காளிமுத்து ஆகியோர் ஆபாசமாக பேசியதோடு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக லட்சுமி தரப்பில் கூறியுள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்டதாக கூறும் லட்சுமி கடந்த மாதம் பத்தாம் தேதி திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் செந்தில்குமார் மற்றும் காளிமுத்து ஆகிய இருவர் மீதும் 35 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்து ஏமாற்றியது, கொலை மிரட்டல் விடுத்தது மற்றும் ஆபாசமாக பேசியதாக புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த நிதி நிறுவன அதிபர்கள் இரண்டு பேரையும் தேடி வந்தனர். இந்நிலையில், இன்று (01.12.22) ஒட்டன்சத்திரம் அருகே பதுங்கி இருந்த செந்தில்குமார் மற்றும் காளிமுத்துவை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ள செந்தில்குமார் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது ஒட்டன்சத்திரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று தற்பொழுது உணவுத்துறை அமைச்சராக உள்ள சக்கரபாணியை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட ஒட்டன்சத்திரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் நடராஜனின் உடன்பிறந்த தம்பி ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.