துபாயில் இருந்து சென்னை வந்த பயணி ஒருவர், தனியார் விமானத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர் அருள் என்பவரிடம் ரகசியமாக பார்சல் ஒன்றை கொடுத்துள்ளார். இதனை கண்காணித்த சுங்கத் துறையினர், ஊழியர் அருளை தொடர்ந்து வந்து மடக்கிப் பிடித்தனர்.
இந்நிலையில், அவரிடம் விசாரித்தபோது, துபாயில் இருந்து கொழும்பு செல்லவந்த அந்த பயணி ஒருவர், தன்னிடம் 2.5 கிலோ தங்க பிஸ்கட்டுகள் அடங்கிய பேப்பர் பார்சலை தந்ததாகவும், அதை வெளியில் உள்ள நபரிடம் தந்து, ஒரு லட்சம் ரூபாய் பணத்தை வாங்கிக் கொள்ளச் சொன்னதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து அந்த பயணியின் அடையாளங்களையும் அருள் தெரிவித்தார். ஆனால், அவர் கொழும்பு சென்றுவிட்டது தெரியவந்தது. கடந்த சில நாட்களாக விமானநிலைய ஊழியர்கள் மூலம் கடத்தல் தங்கத்தை கைமாற்றுவது அதிகரித்துள்ளது. கடந்த இரு வாரங்களில் மூன்று ஊழியர்களிடம் இருந்து 3.5 கோடி ரூபாய் மதிப்புள்ள 7.5 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.