சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் இருந்து பல வெளிநாடு அழைப்புகளை ஏற்படுத்திய கேரள தம்பதியினர், பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு பெரிய இழப்பீடை ஏற்படுத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில் 2,500 சிம்கார்டுகள் பதுக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் சென்னை அமைந்தகரை பகுதியில் சிம் கார்டுகளை பதுக்கி வைத்து, தனியாக டெலிபோன் எக்சேஞ்ச் நடத்தி வந்த நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த விவகாரம் அடங்குவதற்குள் மீண்டும் சென்னையில் மற்றொரு கும்பல் அகப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் வைக்கோல் தொட்டி தெருவில் கேரளாவை சேர்ந்த பஷீர் - சஜீனா தம்பதி 6 மாதங்களுக்கு முன்பு வாடகைக்கு குடியேறியுள்ளனர். இந்த நிலையில் இவர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏராளமான தொலைபேசி அழைப்புகள் சென்றுள்ளது. இதனால் பிஎஸ்என்எல் நிர்வாகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படவே, இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டிருக்கிறது.
புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், துணை ஆணையர் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் ஐஸ் ஹவுஸ் பகுதியில் இருந்து வெளிநாட்டு அழைப்புகள் சென்றது தெரிய வந்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால் அங்கு வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில் உடனடியாக வீட்டின் உரிமையாளர் அழைத்து விசாரணை மேற்கொண்ட போது, வீட்டில் கேரளாவை சேர்ந்த தம்பதியினர் பஷீர்-சஜினா என்பவர்கள் வாடகையில் இருந்துவருவதாக தெரிவித்துள்ளார்.
அதற்கு பின்னர், காவல்துறை உதவியுடன் பிஎஸ்என்எல் அதிகாரிகள் பஷீர் சஜினா தங்கியிருந்த வீட்டுக்கு சென்றபோது, வீட்டு உரிமையாளர் முன்னிலையில் பஷீர் தங்கி இருந்த வீட்டை திறந்து சோதனையிட்டனர். அங்கு 2,500 சிம் கார்டுகள் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதணையடுத்து வேறு பூட்டை போட்டு பூட்டிவிட்டு, பிஎஸ்என்எல் மற்றும் காவல் துறை அதிகாரிகள் சென்றுள்ளனர். தலைமறைவான தம்பதியை தீவிரமாக தேடி வருகின்றனர்.