தமிழகம் முழுவதும் அனுமதியற்ற நேரத்தில் பட்டாசு வெடித்ததாக 2372 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
காற்று மாசுபடுவதாலும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாலும் பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனையை தடை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தீபாவளிக்கு 2 மணிநேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் எனவும் அந்த 2 மணி நேரத்தை மாநில அரசே நிர்ணயித்து கொள்ளலாம் எனவும் உத்தரவிட்டது. இதையடுத்து தமிழக அரசு தீவிர ஆலோசனை நடத்தியது.
இதைத்தொடர்ந்து தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணிவரையிலும் இரவு 7 மணிமுதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகளிலும் தீபாவளிக்கு முன்பு 7 நாட்களும் தீபாவளிக்கு பின்பு 7 நாட்களும் மொத்தம் 14 நாட்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் காற்றில் கலக்கும் மாசுவை அளவீடு செய்யும் எனவும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது நமது கடமை எனவும் தமிழக அரசு வேண்டுகோள் விடுத்தது.
மேலும் குறிப்பிட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது வழக்குப் பதியப்படும் எனவும் அறிவுறுத்தியது.
நேற்று தீபாவளி முடிவடைந்த நிலையில், தமிழகம் முழுவதும் அனுமதியற்ற நேரத்தில் பட்டாசு வெடித்ததாக 2372 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கோவையில் 144, சென்னையில் 359, மதுரையில் 134, காஞ்சிபுரத்தில் 79, திருவள்ளூரில் 105, சேலம் 44, திருச்சி 45 பேர் முறையே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.