ஆந்திராவில் அனந்தபூரில் ஜூனியர் மாணவர்களை ராகிங் செய்த 18 சீனியர் மாணவர்கள் கல்லூரியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் அனந்தபூரிலுள்ள ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு கீழ் இயங்கிவரும் அனந்தபூர் பொறியியல் கல்லூரியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி, வெள்ளிக்கிழமை இரண்டாம் ஆண்டு மாணவர்கள் முதலாமாண்டு மாணவர்களை தங்கள் குருகுல விடுதிக்கு அழைத்துச்சென்று அரை நிர்வாணமாக்கி ரேக்கிங் செய்திருக்கின்றனர்.
முதலாமாண்டு மாணவனின் பெற்றோர் ஒருவர் கொடுத்த புகாரின்பேரில், இந்த சம்பவம் நடந்த ஒரு நாளைக்குப்பிறகு வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் மாணவர்களை கேள்வி எழுப்பியபோது, சீனியர்கள் தங்களை எவ்வாறு ராகிங் செய்தனர் என்பதை விளக்கியுள்ளனர். இதனையடுத்து கல்லூரி நிர்வாகம் ராகிங்கில் ஈடுபட்ட 18 மாணவர்களை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும், இதுகுறித்து பிப்ரவரி 7ஆம் தேதி விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து அனந்தபூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மாதத்தில் மட்டும் அனந்தப்பூர் மாவட்டத்தில் இதுபோன்ற ராகிங் சம்பவம் இரண்டாம் முறை நடந்திருக்கிறது. இதற்குமுன்பு சூர்யபேட்டில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் ஜூனியர்களை ராகிங் செய்த மாணவர்கள் கல்லூரியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதுடன், போலீசாரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.