செய்தியாளர்: வெ.செந்தில்குமார்
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே குவாகம் கிராமத்தின் அமைந்துள்ளது மாரியம்மன் கோவில். அந்த பகுதியைச் சேர்ந்த காமராஜ் என்பவரது மனைவி சரோஜா அந்த பகுதி திமுக கவுன்சிலராக இருக்கிறார். அதேபோல் கொளஞ்சிநாதன் என்பவரின் மனைவி முன்னாள் கவுன்சிலராக இருந்துள்ளார். இவர்களுக்குள் கோயில் தொடர்பான பிரச்னைகள் இருந்து வருகிறது.
கோயில் அருகே உள்ள கொளஞ்சிநாதன் தரப்பினருக்குச் சொந்தமான 23 சென்ட் இடத்தை திருவிழா நடைபெறும் போது அப்பகுதி மக்கள் பயன்படுத்துவார்கள். மற்ற நாட்களில் கொளஞ்சிநாதன் தரப்பினர் பயன்படுத்தி வருவது வழக்கம். இந்நிலையில், கடந்த 2 மாதத்திற்கு முன்பு கொளஞ்சிநாதன் தரப்பினர் அந்த இடத்தில் ஏரி மண்ணை கொண்டு வந்து கொட்டியுள்ளனர். அதனை மட்டம் செய்ய முயன்ற போது காமராஜ் தரப்பினர் “இது கோவிலுக்குச் சொந்தமான இடம்; இதனை ஆக்கிரமிக்க கூடாது” என்று தடுத்துள்ளனர்.
இதனால் இரண்டு தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கல் மற்றும் கம்பால் தாக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க வந்த குவாகம் போலீசார் மோதலை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் காமராஜ் தரப்பைச் சேர்ந்த 58 பேர் மீது வழக்குப் பதிவு செய்து 15 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அதேபோல் கொளஞ்சிநாதன் தரப்பில் 23 பேர் மீது வழக்குப் பதிவு செய்து 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் இரண்டு தரப்பில் இருந்து 81 பேர் மீது வழக்குப் பதிவு செய்து 18 பேரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.