சென்னையை அடுத்த திருவேற்காட்டில் விசாரணைக்கு அழைத்து சென்று காவல்துறையினர் மிரட்டியதால் 15 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது.
சென்னை திருவேற்காடு, கருமாரியம்மன் ஆலய குடியிருப்பு பகுதியில் சேர்ந்த சின்னா, அயப்பாக்கம் ஊராட்சியில் துப்புரவு பணி செய்து வருகிறார். இவரின் இளைய மகன் டேவிட்டை இருசக்கர வாகன திருட்டு தொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை திருவேற்காடு காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் வீட்டிற்கு அனுப்பிவிட்டனர். இதேபோல தொடர்ந்து 2 நாட்கள் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. 3 ஆவது நாளாக டேவிட் விசாரணைக்கு செல்ல வேண்டியிருந்த நிலையில் அவர், மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட டேவிட் உடலை மீட்ட திருவேற்காடு காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த சிறுவன் டேவிட் இருசக்கர வாகனம் திருடும் குற்றவாளிகளுடன் கூட்டு சேர்ந்து வாகன திருட்டில் ஈடுபட்டு வந்ததாக பூவிருந்தவல்லி உதவி ஆணையர் தெரிவித்துள்ளார். இதற்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்றதாகவும், அவரை தாக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.