ஆந்திராவிலிருந்து சென்னைக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை கண்டெய்னரில் கடத்த முயன்றதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 பேர் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர், கடப்பா - ராயசொட்டியிலிருந்து வந்த கண்டெய்னரைப் பார்த்து சந்தேகித்தனர். அதன் முன்னால் ஒரு காரும் பின்னால் 2 காரும் பாதுகாப்பது போல சென்றது சந்தேகத்தை அதிகரித்தது. இதையடுத்து கண்டெய்னரில் சோதனையிட்டபோது ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக் கட்டைகளை வைத்து அவற்றின் மீது அரிசி மூட்டைகள் அடுக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் கண்டெய்னரையும் 3 கார்களையும் பறிமுதல் செய்த காவல்துறையினர் அவற்றில் இருந்தவர்களிடம் விசாரித்தனர். அதில், கடப்பா மாவட்டம் லங்கமல வனப்பகுதியில் வெட்டப்பட்ட செம்மரக்கட்டைகள் சித்தூர் வழியே சென்னைக்கு கடத்தப்பட இருந்தது தெரியவந்தது. கடத்தலில் ஈடுபட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 பேர் உள்பட, கடப்பா, திருப்பதியைச் சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.