தீ வைத்து கொல்லப்பட்ட குழந்தைகள், பெரியவர்கள்... கடும் நெருக்கடியில் தவிக்கும் மம்தா அரசு

தீ வைத்து கொல்லப்பட்ட குழந்தைகள், பெரியவர்கள்... கடும் நெருக்கடியில் தவிக்கும் மம்தா அரசு
தீ வைத்து கொல்லப்பட்ட குழந்தைகள், பெரியவர்கள்... கடும் நெருக்கடியில் தவிக்கும் மம்தா அரசு
Published on

மேற்கு வங்க மாநிலத்தில் வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டதில் 8 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து மாநில அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது. அதைத்தொடர்ந்து அம்மாநில ஆளுநரும் ஆளும் அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்திருப்பதால், அக்கருத்துக்கும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் பர்ஷால் கிராம பஞ்சாயத்தின் துணைத் தலைவராக இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பது ஷேக் என்பவர், கடந்த திங்களன்று இரவு அடையாளம் தெரியாத கும்பலால் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து, அவரது எதிர்த்தரப்பினர் வசிக்கும் ராம்புர்கர் பகுதியில் 12 வீடுகளுக்கு சிலர் தீ வைத்துள்ளனர். தீயை அணைக்க வந்த வாகனத்தை அவர்கள் தடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் தீ பிடித்து எரிந்த வீட்டில் 2 குழந்தைகள் உள்ளிட்ட 7 பேர் உடல்கள் கருகி உயிரிழந்தனர். அவர்களின் உடல் மட்டுமே மீட்கப்பட்டன. பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட மற்றுமொருவரும் மருத்துவமனையில் உயிரிழந்தார். பதற்றமான சூழ்நிலை நிலவும் நிலையில் அப்பகுதியில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் கொல்லப்பட்டதால், அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களே வீடுகளுக்கு தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக பாரதிய ஜனதா கட்சி குற்றம்சாட்டியுள்ளது. `மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும்’ என்றும் அம்மாநில பாஜக எம்பிக்கள், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து வலியுறுத்தி உள்ளனர். இதைத் தொடர்ந்து, வன்முறை குறித்து மேற்கு வங்க மாநில அரசிடம் அமித் ஷா விளக்க அறிக்கை கேட்டுள்ளார்.

மேலும், நிகழ்விடங்களுக்கு நேரில் சென்று விசாரித்து உண்மை நிலையைக் கண்டறிய பாஜக எம்பிக்கள் உள்ளிட்ட 5 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை பாரதிய ஜனதா கட்சித் தலைமை நியமித்துள்ளது. இதனிடையே, கொடூரமான கலாச்சாரத்தின் பிடியில் மேற்கு வங்கம் சிக்கியிருப்பதாக அம்மாநில ஆளுநர் ஜக்தீப் தன்கர் விமர்சித்திருந்தார். இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள முதலமைச்சர் மம்தா பானர்ஜி, `இதுபோன்ற கருத்துக்களைத் தவிர்க்க வேண்டும்’ என்று கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். மேலும், கண்ணியமான பதவியை வகிக்கும் நபருக்கு இந்த பேச்சுகள் தகுதியற்றது என்றும் மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com