ஹரியானாவில் சாமியார் எனக்கூறிக்கொண்டு பல குற்றங்களுக்காக அறியப்பட்ட அமர்வீர் (எ) அமர்புரி (எ) பில்லு (எ) ஜலேபி பாபா என்றவர், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காகவும், தன் குற்றச்செயலை வீடியோ எடுத்து வைத்து அப்பெண்களை மிரட்டியதற்காகவும் ஃபதேஹாபாத்திலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுள்ளார். சுமார் 120 பெண்களை இவர் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக சொல்லப்படுகிறது.
63 வயதாகும் இவருக்கு, கூடுதல் மாவட்ட நீதிபதி பல்வந்த் சிங், போக்சோ சட்டத்தின் பிரிவு 6-ன் கீழ் 14 ஆண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளார். 18 வயதுக்குட்பட்ட குழந்தையை இருமுறை வன்கொடுமை செய்த குற்றத்துக்காக இந்த தண்டனை இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், வேறு இரண்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் இந்திய அரசியலைப்பு பிரிவு 376 சி-ன் கீழ் 7 வருட சிறை தண்டனையும்; பிரிவு 67 ஏ-ன் கீழ் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. மற்றொரு ஆயுதச்சட்டத்தில் அவர் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
இக்குற்றங்களின் மூலம், இந்த அமர்வீர் (எ) ஜலேபி பாபா 14 வருடங்களுக்கு சிறையிலிருப்பார் என்று பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞர் சஞ்சய் வர்மா தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “இவர் கடந்த 4.5 வருடங்களாக சிறையில்தான் இருக்கிறார். இன்னும் 9.5 வருடங்களுக்கும் இங்கேதான் இருப்பார்” என்றுள்ளார். சிறைதண்டனை அறிவிக்கப்பட்ட பிறகு, நீதிபதி முன்பு கண்ணீர்விட்டு அழுதுள்ளார் அமர்வீர் என்று சொல்லப்படுகிறது.
இவரிடம் இருந்து கடந்த 2018-ல் காவல்துறையினர் சுமார் 120 ஆபாச வீடியோக்களை பறிமுதல் செய்து, காவல்துறை அவரை கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. அவரை கைது செய்த அப்பகுதி மகளிர் காவல் நிலைய இன்சார்ஜ் பிம்லா தேவி, “தன்னிடம் குறைகூற வந்த பெண்களுக்கு, ஏதோவொரு திரவத்தில் போதைப்பொருள்களை கலந்து கொடுத்திருக்கிறார் இவர். அதன்பின் அவர்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியிருக்கிறார். பின் அதை வீடியோ எடுத்து வைத்து, அப்பெண்களை அச்சுறுத்தி அவர்களிடமிருந்து பணம் பறிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்” எனகூறியிருந்தார்.
இந்த அமர்வீரின் மனைவி இறந்துவிட்ட நிலையில், இவருக்கு தற்போது 4 மகள்களும், 2 மகன்களும் இருப்பதாக சொல்லப்படுகிறது. 2004-ல் ஹரியானாவின் டொஹானாவில் குடியேறிய இவர், அங்கு வீடும் கோயிலும் கட்டியிருக்கிறார். அங்கு வந்தவர்களிடம், குறிப்பாக அங்கு வந்த பெண்களிடம் அத்துமீறியுள்ளார். அதில் ஒரு பெண், தான் அந்த கோயிலுக்குள்ளேயே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக புகார் தெரிவித்தார். அதுபற்றி தான் காவல்நிலையத்தில் புகார் கொடுத்த போதிலும், அமர்வீர் பலமுறை ஜாமீன் பெற்றுவிட்டதாக அப்பெண் தெரிவித்திருந்தார்.