’நான் ஒரு அப்பாவி என்னை தவறாக வழக்கில் இணைத்துள்ளனர்’ என அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் ஜாமின் கோரிய விசாரணையில் அரும்பாக்கம் காவல்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அரும்பாக்கம் நகைக்கடன் வங்கிக் கொள்ளை வழக்கில் கைதான அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளரி அமல்ராஜ் ஜாமீன் வேண்டி மனு ஒன்றை சென்னை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார், அந்த மனுமீதான விசாரணையில் ஜாமீன் குறித்து பதிலளிக்க காவல்துறைக்கு சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அரும்பாக்கம் ரசாக்கார்டன் பகுதியிலுள்ள தனியார் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்டதில் மூன்றரை கிலோ தங்க நகைகளை, அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜின் வீட்டில் இருந்து காவல்துறை மீட்டனர். பின்னர் அமல்ராஜ் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், காவல் ஆய்வாளர் சார்பில் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் ஒசு அப்பாவி என்றும், இந்த வழக்கில் அவரை காவல்துறை தவறாக சேர்த்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளையும் அமல்ராஜ் ஏற்கத் தயாராக உள்ளதாகவும் மற்றும் அவருக்கு ஜாமீன் வழங்குமாறும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை விசாரித்த நீதிபதி ஸ்ரீதேவி, மனு குறித்து சென்னை அரும்பாக்கம் காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை செப்டம்பர் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.