பூந்தமல்லி அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள 3 டன் குட்காவை பறிமுதல் செய்த போலீசார் மூன்று பேரை கைது செய்தனர்.
சென்னை குன்றத்தூர் பகுதியில் தாம்பரம் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் ஷாலினி, குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் சந்துரு ஆகியோர் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தனர் அப்போது அதில் தடை செய்யப்பட்ட குட்கா இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து காரில் வந்த கண்டிகையைச் சேர்ந்த சிராஜுதீன் (43), கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த மணிமாறன் (45), ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், பூந்தமல்லி அடுத்த கண்ணபாளையம் அருகே உள்ள தனியார் குடோனில் குட்கா பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
இதைத் தொடர்ந்து அங்கிருந்த குடோனை திறந்து பார்த்தபோது, சுமார் ரூ.50 லட்சம் மதிப்புள்ள குட்கா மூட்டை, முட்டையாக இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பறிமுதல் செய்த குட்காவை தாம்பரம் துணை கமிஷன் சிபி.சக்கரவர்த்தி பார்வையிட்டார். இந்த சம்பவத்தில் குடோன் உரிமையாளர் லோகநாதன் (42), என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேரை கைது செய்துள்ள போலீசார், நான்கு கார்கள், இரண்டு மொபெட் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.