இந்திய தடுப்பூசி சான்றிதழ்களை மறுக்கும் பிரிட்டன்... பதிலடி கொடுக்க இந்தியா திட்டம்

இந்திய தடுப்பூசி சான்றிதழ்களை மறுக்கும் பிரிட்டன்... பதிலடி கொடுக்க இந்தியா திட்டம்
இந்திய தடுப்பூசி சான்றிதழ்களை மறுக்கும் பிரிட்டன்... பதிலடி கொடுக்க இந்தியா திட்டம்
Published on

இந்தியாவில் வழங்கப்படும் கோவிட் தடுப்பூசி சான்றிதழ்களை ஏற்க பிரிட்டிஷ் அரசு மறுப்பு தெரிவித்ததையடுத்து, அவர்களுக்கு பதிலடி தரும்விதமாக பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்தியா வந்தால், அவர்கள் 2 டோஸ் தடுப்பூசி போட்டிருந்தாலும் இந்தியாவில் அவர்களுக்கு பத்து நாள் தனிமைப்படுத்துதல் கட்டாயம் என வலியுறுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

முன்னதாக இந்தியர்கள் 2 தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டு அந்த சான்றிதழுடன் பிரிட்டன் நாட்டுக்கு பயணம் செய்தாலும் அவர்கள் கட்டாயம் 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இரண்டு முறை கோவிட் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் பிரிட்டன் அரசு சில தினங்களுக்கு முன் உத்தரவிட்டிருந்தது. இந்தியாவில் அளிக்கப்படும் தடுப்பூசிகளுக்கு பிரிட்டன் அங்கீகாரம் அளிக்காதது இந்தியாவுக்கு எதிரான செயல் என இதற்கு எதிர்ப்பு வலுத்து வந்தது.

குறிப்பாக ‘அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அளிக்கப்படும் தடுப்பூசி சான்றிதழ்களை பிரிட்டிஷ் ஏற்கும்போது, ஏன் இந்திய தடுப்பூசிக்கு மறுப்பு தெரிவிக்கிறது? பிரிட்டனில் உருவாக்கப்பட்ட ஆக்ஸ்போர்ட் அஸ்ட்ராஸினிக்கா (இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் விநியோகிக்கப்படுவது) தடுப்பூசிதான் இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது எனும்போது, தங்கள் நாட்டில் உருவாக்கப்பட்ட தடுப்பூசியை ஏன் பிரிட்டன் அரசு அங்கீகரிக்க மறுக்கிறது?’ என்பது போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்கும்விதமாக பிரிட்டன் அரசு, ‘போலி சான்றிதழ்களை பயன்படுத்தி தனிமைப்படுத்துதல் விதியிலிருந்து விலக்கு பெற சில பயணிகள் முயற்சி செய்கின்றனர். அதை தடுக்கவே இது செய்யப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்தியாவில் வழங்கப்படும் சான்றிதழுக்கு க்யூ.ஆர். கோட் உள்ளது என்பதால் சுலபமாக அதன் உண்மைத்தன்மையை உறுதி செய்து கொள்ளலாம் என்று இந்தியா சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

இவ்விவகாரத்தில் சமாதானமாக செல்லும்வகையில், தற்போது ஐக்கிய நாடுகள் மகாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்றுள்ள அமைச்சர் ஜெய்சங்கர், அங்கே பிரிட்டன் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் எலிசபெத் ட்ருஸ் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த பேச்சுவார்த்தையில் தடுப்பூசி சான்றிதழ் விவகாரம் முக்கிய இடம் பிடித்ததாகவும், ‘இந்தியாவில் இரண்டு தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டு அந்த சான்றிதழுடன் பிரிட்டன் பயணம் செய்பவர்களுக்கு தனிமைப்படுத்தல் விதியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்’ என ஜெய்சங்கர் அழுத்தமாக வலியுறுத்தியதாகவும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.

பிரிட்டன் அரசின் இந்த புதிய கொள்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் அமைச்சர் சசி தரூர் தனது பிரிட்டன் நாட்டு பயணத்தை ரத்து செய்துள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது. ‘இந்தியாவுக்கு எதிராக ஏன் பிரிட்டிஷ் அரசு செயல்படுகிறது? ஒரு நாட்டுக்கு பயணம் செய்வதற்காக பத்து நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளும் அளவுக்கு அவகாசம் யாரிடம் இருக்கும்?’ என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.

சசி தரூர் மட்டுமன்றி, பிரட்டனின் இந்தக் கொள்கையை முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயராம் ரமேஷ்ஷூம் வன்மையாக கண்டித்துள்ளார். அவர் கூறுகையில், ‘இந்திய அரசு இவ்விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து நமது நாட்டில் வழங்கப்படும் சான்றிதழை பிரிட்டன் நாடு அங்கீகாரம் அளிக்க பேச்சுவார்த்தை மூலம் வழிவகுக்க வேண்டும்’ என்றார். இத்தகைய சூழ்நிலையில்தான் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இந்தக் கொள்கையை மாற்ற வேண்டும் என பிரிட்டன் அமைச்சர் வழியாக அந்நாட்டு அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையே இந்திய சான்றிதழ்களை அங்கீகரிக்க பிரிட்டிஷ் தொடர்ந்து மறுத்தால், பதிலடியாக இந்திய அரசு பிரிட்டிஷ் பயணிகளுக்கு 10 நாள் தனிமைப்படுத்துதல் கட்டாயம் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. இவ்விவகாரத்தில் பிரிட்டன் மட்டுமல்லாமல் பிற நாடுகளுடனும் சான்றிதழ் அங்கீகார கொள்கை தொடர்பான ஒப்பந்தங்களை இறுதி செய்ய இந்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

அந்தத் திட்டத்தின்படி இந்திய அரசின் கோவிட் சான்றிதழ்களை அங்கீகரிக்கும் நாடுகள் அளிக்கும் சான்றிதழ்கள் மட்டுமே இந்தியாவில் அங்கீகாரம் பெறும் என தெரிகிறது. இந்தியாவில் அளிக்கப்படும் தடுப்பூசிகள் மற்றும் சான்றிதழ்களை அங்கீகரிக்காத நாடுகளின் தடுப்பூசிகளும், சான்றிதழ்களும் இந்தியாவில் அங்கீகரிக்கப்படாது என்ற கொள்கையுடன் இந்த ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்படும் என வெளியுறவுத்தறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

- கணபதி சுப்ரமணியம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com