சீனாவில் கடந்த 2020-ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலகத்தையே ஆட்டிப்படைத்தது. லட்சக்கணக்கான உயிர்களை பலி வாங்கியது. இந்தியாவில் 3 அலைகளாக மிரட்டிய கொரோனா வைரஸ் தொற்றால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.
கொரோனாவில் இருந்து மீண்டு சகஜ நிலைக்கு உலக நாடுகள் திரும்பியுள்ள நிலையில், கொரோனா வைரஸை விட மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் தொற்றுநோயை எதிர்கொள்ள உலகம் தயாராக வேண்டும் என எச்சரித்துள்ளது உலக சுகாதார அமைப்பு.
ஜெனீவாவில் நடைபெற்ற உலக சுகாதார மாநாட்டில் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், “கொரோனா பெருந்தொற்று உலக சுகாதார அவசர நிலையில் இருந்துதான் நீக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இன்னமும் மனித குலத்துக்கான அச்சுறுத்தல் என்ற நிலையில் இருந்து அது நீக்கப்படவில்லை.
இன்னும் கொரோனா முடிவடையவில்லை. அது இன்னும் கொடிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய திரிபுகளாக எதிர்காலத்தில் உருவெடுக்கும். உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் வைரஸ் திரிபுகளாகவும் அவை மாறி ஒரு பெரிய அலையை உருவாக்கலாம்.
எனவே எந்தவிதமான அவசரநிலையையும் சமாளிக்கக்கூடிய வகையில் உலக நாடுகள் இருக்க வேண்டும். அடுத்த பெருந்தொற்று நம் கதவை தட்டும் போது அதை எதிர்கொள்ள நாம் அனைவரும் ஓரணியில் தயாராக இருக்க வேண்டும்.
கடந்த மூன்று ஆண்டுகளில் கொரோனாவால் 70 லட்சம் பேர் இறந்ததாக பதிவாகியுள்ளன. ஆனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இதைவிட பல மடங்கு அதிகம் என்பது எங்களுக்குத் தெரியும். குறைந்தது 2 கோடி பேர் உயிரிழந்திருக்கக்கூடும்” என்று கூறியுள்ளார்.