கொரோனாவிற்கான மருந்து கண்டுபிடிக்க உலகமே முயற்சித்துக் கொண்டிருக்கும் சூழலில், சித்த மருத்துவர் ஒருவர் கண்டறிந்த மருந்தில் வைரஸ் எதிர்ப்பு சக்தி இருக்கலாம் என தமிழக சித்தா ஆயுர்வேத மருத்துவர்களைக் கொண்ட குழு தெரிவித்துள்ளது. யார் அவர்? என்ன மருந்து எனப் பார்க்கலாம்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ளது சித்த மருத்துவர் சுப்பிரமணியத்தின் வீடு. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என ஆரம்பித்து 22 ஆண்டுகளாக தொடர்ந்த இவரின் முயற்சியின் முன்னேற்றமே இம்ப்ரோ எனும் 66 மூலிகைகளைக் கொண்ட சித்த மருத்துவப் பொடி. எளிதாகக் கிடைக்கும் சுக்கு, மிளகு, திப்பிலி, வெட்டிவேர் முதல் சற்று அரிதாகக் கிடைக்கும் வேர்கள் வரை 66 மூலிகைகளைக் கொண்டு இந்த மருந்து உருவாக்கப்பட்டுள்ளது.
இதனை பரிசோதிக்கக் கோரி அரசிடம் வைத்த கோரிக்கை கண்டுகொள்ளப்படாத நிலையில், நீதிமன்றத்தை இவர் அணுகினார். இந்த மருந்தை மருத்துவ நிபுணர் குழுவை அமைத்து பரிசோதிக்க உத்தரவிட்டது நீதிமன்றம். சோதனை முடிவில் வைரஸ் எதிர்ப்பு சக்தி இருக்கலாம் என தெரியவந்துள்ளதால், மத்திய சித்தா மற்றும் ஆயுர்வேத ஆராய்ச்சி கவுன்சிலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
சீனாவில் கொரோனாவை கட்டுப்படுத்த அவர்களின் பாரம்பரிய மருத்துவமே உதவி வருவதாகக் கூறப்படும் நிலையில், நமது பாரம்பரிய சித்த மருத்துவ முறையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த இம்ப்ரோ மருத்துவப் பொடியில், வைரஸ் எதிர்ப்பு சக்தி இருக்கலாம் என ஆய்விலும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.