இந்தியாவில் 15 முதல் 18 வயது வரை உள்ள சிறுவர் சிறுமிகளுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு கோவாக்சின் மட்டுமே செலுத்தப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஜனவரி 3 ஆம் தேதி முதல் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்தியாவைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள சிறாருக்கான கோவாக்சின் தடுப்பூசிக்கு மட்டுமே இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதனால், சிறாருக்கு கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே போடப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதேபோல 60 வயதுக்கு மேற்பட்டவர்களும், முன்களப்பணியாளர்களும் கூடுதல் தடுப்பூசி (பூஸ்டர் டோஸ்) எடுத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு அவர்கள் ஏற்கனவே இருமுறை செலுத்திக் கொண்டே அதே தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2-வது தடுப்பூசிக்குப் பின் 9 முதல் 12 மாதங்களுக்குள் கூடுதல் தடுப்பூசி எடுத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே 15 முதல் 18 வயதுக்குட்பட்ட வயது பிரிவினருக்கு கோவாக்சின் தடுப்பூசி சிறந்த எதிர்ப்பாற்றலை வழங்குவது ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.