கொரோனா மூன்றாம் அலையான ஒமைக்ரான் பரவலின்போது ஏற்படக்கூடிய பொதுவான ஐந்து அறிகுறிகளை மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.
கொரோனா மூன்றாம் அலையில் ஒமைக்ரான் வகை தொற்று பரவி நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலை மற்றும் மூன்றாம் அலைகளை ஒப்பிட்டிருக்கிறது மத்திய சுகாதாரத் துறை. குறிப்பாக டெல்லியில் அதிவேகமாக பரவிவரும் ஒமைக்ரான் பரவல் குறித்த தகவலை வெளியிட்டிருக்கிறது. உடல் நடுக்கம் அல்லது நடுக்கமற்ற காய்ச்சல், இருமல், தொண்டையில் எரிச்சல், தசை பலவீனம் மற்றும் சோர்வு ஆகிய 5 பொதுவான அறிகுறிகள் கொரோனா மூன்றாம் அலையில் காணப்படுவதாக சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.
டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 99% நோயாளிகளுக்கு இந்த அறிகுறிகள் தென்படுவது சர்வேயில் தெரியவந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். எனினும், காய்ச்சல், இருமல் மற்றும் தொண்டை எரிச்சல் 5 நாட்களுக்குப்பிறகு படிப்படியாக குறைந்துவிடுவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். அதேபோல், 11 முதல் 18 வயதினருக்கு காய்ச்சலுடன் மேல் சுவாசப்பாதையில் தொற்று ஏற்படுவதாகவும், ஆனால் இந்தமுறை நிமோனியா பாதிப்பு குறைவாக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இதற்கிடையே இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோரில் இதுவரை கிட்டத்தட்ட 94% தடுப்பூசி முதல் டோஸ் செலுத்திக்கொண்டதாகவும், 72% பேர் 2 டோஸ் தடுப்பூசிகளும் செலுத்திக்கொண்டதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.
சமீபத்திய செய்தி: இந்தியாவில் 3.47 லட்சத்தை தொட்டது தினசரி கொரோனா பாதிப்பு