பெண்களை லத்தியால் தாக்கும் வீடியோ: எஸ்ஐ கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம்

பெண்களை லத்தியால் தாக்கும் வீடியோ: எஸ்ஐ கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம்
பெண்களை லத்தியால் தாக்கும் வீடியோ: எஸ்ஐ கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம்
Published on

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை காரணம் காட்டி உணவகத்திற்குள் புகுந்து பெண்களை லத்தியால் தாக்கிய உதவி ஆய்வாளர் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டார்.

கோவை காந்திபுரம் வெளியூர் பேருந்து நிலையம் பகுதியில், மோகன்ராஜ் என்பவர் உணவகம் நடத்தி வருகின்றார். நேற்று இரவு அவரது உணவகத்திற்கு வந்த ஓசூரை சேர்ந்த 5 பெண்கள் தங்களுக்கு மிகவும் பசிப்பதாக கூறியதை அடுத்து, உணவகத்தின் ஷட்டரை பாதி அளவு அடைத்துவிட்டு அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டிருக்கிறது. அப்போது அங்கு வந்த காட்டூர் உதவி ஆய்வாளர் முத்து, உணவகத்திற்குள் நுழைந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த பெண்களை லத்தியால் தாக்கியுள்ளார்.

இதில், 4 பேர் பலத்த காயம் அடைந்தனர். இந்த சம்பவம் உணவகத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. இந்த வீடியோக்கள் வெளியான நிலையில் பலரும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இதுதொடர்பாக, உணவக உரிமையாளர் மோகன்ராஜ், காவல்துறை ஆணையாளரிடம் புகார் அளித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பேருந்து நிலைய பகுதிகளில் இரவு 11 மணி வரை உணவகம் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்படலாம் என்று விதி உள்ளபோதும், முன்னதாகவே கடையை அடைக்கும்படி சொன்னதுடன், பெண்கள் என்றும் பாராமல் லத்தியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com