தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழப்போரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. ஒரே நாளில் 20 பேர் வைரஸ் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் முதல் உலக நாடுகளை கொரோனா வாட்டிவதைத்து வருகிறது. கிட்டத்தட்ட 8 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் தற்போது தான் பல நாடுகளும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. இந்தியாவிலும் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்ததின் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் மெல்ல மெல்ல ஊரடங்கு தளர்வுகள் செய்யப்பட்டன. தற்போது கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது.
தமிழகத்தை பொருத்தவரை கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைவாகவே பதிவாகி வருவது சற்று நிம்மதி அளிக்கும் வகையில் உள்ளது. ஒரே நாளில் 2 ஆயிரத்து 334 பேருக்கு புதிதாக நோய் தொற்று ஏற்பட்டதை அடுத்து, இதுவரையிலான பாதிப்பு 7 லட்சத்து 43 ஆயிரத்து 822 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 7 லட்சத்து 13 ஆயிரத்து 584 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 11 ஆயிரத்து 344 பேர் உயிரிழந்துள்ளனர்.
18 ஆயிரத்து 894 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது தற்போது தினசரி உயிரிழப்பு வெகுவாக குறைந்துள்ளது. ஒரே நாளில் 20 பேர் வைரஸ் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இது கடந்த 4 மாதங்களில் மிகக்குறைந்த அளவு எண்ணிக்கையாகும். அவர்களில் அனைவரும் இணை நோய் உள்ளவர்கள். சென்னையில் ஒரே நாளில் 601 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
மாவட்டங்களை பொருத்தவரை, கோவையில் 205 பேரும், திருவள்ளூரில் 133 பேரும், செங்கல்பட்டில் 120 பேரும், திருப்பூரில் 119 பேரும், சேலத்தில் 102 பேரும் ஒரே நாளில் நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.