கொரோனா பாதிப்பில் தமிழகம் இரண்டாம் கட்டத்தை நோக்கி நகர்வதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொது மக்களுக்கு எச்சரித்துள்ளார்.
சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேர கொரோனா கட்டுப்பாட்டு அறையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஏற்கெனவே தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பித்து இருக்கிறோம்.
பொது மக்கள் தேவைப்படும் போது மட்டும் வெளியே வந்து பொருள்களை வாங்கிச் செல்லவும். வீட்டை விட்டு தேவை இல்லமால் வெளியே வர வேண்டாம்” என கேட்டுக்கொண்டார்.
மேலும் தொடர்ந்த அவர், “மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அரசு மக்களுக்கு அத்தியாவசிய தேவை பொருள்கள் கிடைக்க அனைத்து நடவடிக்கையும் எடுத்துள்ளது. அனைத்து இடங்களிலும் சுகாதாரப் பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்து வருகிறார்கள். ஓமந்தூரார் மருத்துவமனை கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையிலும் கொரோனா சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு இருக்கிறோம். வெளி நாட்டில் இருந்து வந்தவர்கள் வீட்டிற்கு யாரும் செல்ல வேண்டாம்” என்றார்.
ஆம்புலன்ஸ் சேவை குறித்து பேசிய முதல்வர், “200 ஆம்புலன்ஸ் இன்று முதல் கொரோனாவுக்காக இயக்கப்படுகிறது. கொரோனாவை தடுக்க ஒரே வழி அனைவரும் தனிமைப்பட்டிருக்க வேண்டும் என்பது தான். கொரோனா பாதிப்பில் தமிழகம் 2 ஆவது கட்டத்தை நோக்கி நகர்கிறது.. தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்கள் மன அழுத்தம் இருந்தால் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு ஆலோசனை பெற வேண்டும். அரசு அனுமதித்துள்ள தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்" என கூறியுள்ளார்.