கொரோனாவால் பாதிக்கப்பட்ட அரியலூர் நகராட்சி ஆணையரின் நம்பிக்கையூட்டும் வார்த்தை...
கொரோனா தொற்று உறுதியானதால், பெரம்பலூர் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மனைவி, மகன், மகள் என குடும்பத்துடன்;, சிகிச்சை பெற்றுவரும் அரியலூர் நகராட்சி ஆணையர் குமரன் உருக்கமாக பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.
பெரம்பலூரைச் சேர்ந்த குமரன், அரியலூர் நகராட்சி ஆணையராக இருக்கிறார். இவர் அரியலூர் நகராட்சி மூலம் பல்வேறு கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுவந்ததால் குமரனுக்கு கொரோனா நோய்தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரைத் தொடர்ந்து அவரது மனைவி,மகன் மற்றும் மகள் என குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தற்போது அனைவரும் பெரம்பலூர் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
சிகிச்சையில் இருக்கும் நகராட்சி ஆணையர் குமரன், சிகிச்சையின் போது பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது. அதில் பேசிய ஆணையர் குமரன், அரியலூர் நகராட்சி பகுதியில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லும் போது அவர்களை படம் பிடித்து சமூக வளைதளங்களில் போட வேண்டாம் என்றும், அதே போல் போடுபவர்களை சமூக வலைதளங்களில் ஊக்கப்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.
அதற்கு பதில் அவர்களை சிகிச்சைக்கு அழைத்து செல்லும் போது மாடி பால்கனியில் நின்றோ அல்லது தூரத்தில் நின்றோ நாங்கள் இருக்கிறோம் தைரியமாக சென்று வாருங்கள் என்றும், விரைவில் குணமடைந்து வருவீர்கள் என நம்பிக்கையோடு பேசுங்கள்.
ஏனெனில் தற்போது கொரோனா நோய்தொற்று வேகமாக பரவிவருவதை பார்த்தால் உங்கள் வீட்டு வாசலில் ஒரு நாள் ஆம்புலன்ஸ் வந்து நிற்கும் சூழ்நிலை உள்ளது. கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களை மதியுங்கள். அவர்கள் விரும்பி நோய்தொற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. எதிர்பாராமல் கிரிமி தொற்றினால் பாதிக்கப்பட்டவர்தான். அவர்களுக்கு என்றும், அன்பையும் நம்பிக்கையும் மட்டுமே பரப்புங்கள். காற்று புயலாகி நம் வாழ்வை சாய்க்கலாம். கடல்நீரும் கரைதாண்டி நம்வாழ்வை சுவைக்கலாம், .நம்பிக்கையோடு எழுந்துநில் மனித சக்திக்கு மாற்றொன்று இல்லை. இன்று எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மீண்டு வருகின்றேன் என பேசியுள்ளார்.