இந்தியாவில் கடந்த 18 நாட்களாக கொரோனா தொற்றுகள் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளன. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட புள்ளிவிவரப்படி நேற்று ஒரு நாளில் மட்டும் 312 பேர் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு நாள் கொரோனா தொற்று 62 ஆயிரத்து 714 ஆக பதிவாகியுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனாவால் இறந்தவர்களில் 70 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் இணை நோயுள்ளவர்கள் என்றும் சுகாதாரத்துறை கூறியுள்ளது. கொரோனா பரிசோதனை செய்யப்படும் ஒவ்வொரு 100 பேருக்கும் தொற்று உறுதியாவது இந்தியாவில் 5.04% ஆக இருப்பதாகவும் மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 22.78% ஆக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 கோடியை கடந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே பெங்களூருவில் குழந்தைகளுக்கு தொற்று பரவுவது அதிகரித்து வருகிறது. கடந்த 4 வாரங்களில் மட்டும் 10 வயதுக்கு கீழான 470 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் குழந்தைகள் வீட்டுக்கு வெளியே செல்வது அதிகரித்திருப்பதே இதற்கு காரணம் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா பரவுவதற்கு குழந்தைகள் காரணமாகும் நிகழ்வுகள் அதிகரித்திருப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்