கோவேக்ஸின் மருந்தைக் கண்டறிந்த பாரத் பயோடெக்... சாதித்த தமிழர் யார் தெரியுமா..?

கோவேக்ஸின் மருந்தைக் கண்டறிந்த பாரத் பயோடெக்... சாதித்த தமிழர் யார் தெரியுமா..?
கோவேக்ஸின் மருந்தைக் கண்டறிந்த பாரத் பயோடெக்... சாதித்த தமிழர் யார் தெரியுமா..?
Published on

இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பு மருந்தாக கூறப்படும் “கோவேக்ஸின்” மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் இந்தியன் நேஷனல் இன்ஸ்ட்டிட்யூட் ஆப் வைரலாஜி மையம் ஆகியவற்றுடன் இணைந்து கண்டறிந்துள்ளது. இந்த மருந்தை நோயாளிகளின் உடலில் செலுத்தி சோதனை செய்ய மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.

இம்மருந்தை கண்டறிந்த பாரத் பயோடெக் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாகியான டாக்டர் கிருஷ்ணா எல்லா, ஒரு தமிழர். தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணிதான் எல்லாவின் சொந்த ஊர். விவசாயத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்த கிருஷ்ணா, குடும்பச் சூழ்நிலை காரணமாக “பேயர்” என்ற மருந்து நிறுவனத்தில் விவசாயப் பிரிவில் பணிக்குச் சேர்ந்துள்ளார். அதன் பின்னர் கிருஷ்ணாவிற்கு ரோட்டரி ப்ரீடம் ஆப் ஹங்கர் அமைப்பின் மூலம் உதவித்தொகைக் கிடைக்க அமெரிக்காவிற்கு சென்று முதுகலை மேற்படிப்பை தொடர்ந்துள்ளார். ஹவாய் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பை நிறைவு செய்த கிருஷ்ணா எல்லா, அதன் பின்னர் டாக்டர் பட்டத்தை விஸ்கான்சின்-மெடிசன் என்ற பல்கலைகழகத்தில் நிறைவு செய்தார். இதனைத்தொடர்ந்து தனது தாயாரின் வற்புறுத்தலுக்கு இணங்க கடந்த 1995 ஆம் ஆண்டு கிருஷ்ணா எல்லா இந்தியா திரும்பினார்.

இந்தியா திரும்பியது குறித்து அவர் கூறும் போது “ நான் இந்தியா திரும்பியதற்கு எந்த நோக்கமும் இல்லை. எனது தாயார் நான் எதைச் செய்தாலும் இந்தியா வந்து செய்யுமாறு வற்புறுத்தினார். அதன் பின்னர் தான் இந்தியாவில் ஹெபடைடிஸ் (கல்லீரல் சம்பந்தமான பிரச்னை)அதிகமுள்ளதைக் கண்டேன். இதனைத்தொடர்ந்து அந்த பிரச்னைக்கு மலிவு விலையில் மருந்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றே இந்தியா வந்தேன்.” என்று பேசினார்.

ஹைதாராபாத்தில் ஒரு சிறிய ஆய்வுக் கூடத்தை நிறுவிய கிருஷ்ணா எல்லா, ஹெபடைடிஸ் பிரச்னைக்கான மருந்தை வெறும் ஒரு டாலரில் வழங்குவதற்கான திட்ட அறிக்கையை சமர்ப்பித்தார். 1996 ஆம் ஆண்டு அப்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் மாசுபாடு இல்லாத பயோடெக் பூங்காவை நிறுவுவதற்கு கோரிக்கை வைத்தார். ஹெபடைடிஸ் மருந்தை கண்டறிவதற்கான ஆலையும் அமைக்கப்பட்டது. 

ஆனால் அப்போது அவர்களுக்கு போதுமான நிதி கிடைக்க வில்லை, இந்நிலையில் ஒரு தனியார் வங்கி 2 கோடி நிதி அளித்தது. 4 வருட முயற்சிக்குப் பிறகு ஹெபடைடிஸ் பிரச்னைக்கான மருந்து கடந்த 1999 ஆம் ஆண்டு ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து தேசிய நோய்த் தடுப்புத்திட்டத்தின் கீழ் 35 மில்லியன் டோஸ்களை, தலா ஒன்றை 10 ரூபாய்க்கு வழங்க ஏற்பாடு செய்தார். முதன் முதலாக ஜிகா வைரஸ்க்கு மலிவான விலையில் மருந்து கண்டறிந்ததும் பயோடெக் நிறுவனம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய மற்றும் உலக அளவில் விருதுகளை பெற்ற கிருஷ்ணா எல்லா 2013 ஆம் ஆண்டு ஸ்பெக்ட்ரம் பெர்சன் ஆஃப் இயர் விருதையும் 2008 ஆம் ஆண்டு பிரதமரிடம் இருந்து சிறந்த தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புக்கான விருதையும் பெற்றுள்ளார்.

இது குறித்து கிருஷ்ணா எல்லா கூறும் போது “ எங்கள் நிறுவனம் சாதாரண மனிதர்களுக்கு தடுப்பூசிகளை மலிவு விலையில் கொடுக்கும் போது, அதன் தரம் குறித்த விமர்சங்களை நாங்கள் எதிர்கொள்கிறோம். ஆனால் தொழில் நுட்பம் உதவியால் நாங்கள் உருவாக்கும் இந்த மருந்துகள் சாமனியனுக்கு கிடைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எந்த ஒருவரும் சுகாதார தீர்வுகள் கிடைக்காமல் இருந்து விட கூடாது என்று நாங்கள் கருதுகிறோம். அதனால் மட்டுமே எங்களால் இந்த மலிவு விலைக்கு மருந்திகளை வழங்க முடிகிறது” என்று கூறினார்.

Courtesy: reddif, Better india

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com